ஸ்தாபன ஐக்கியம்
அறிஞர், சி. என். அண்ணாத்துரை, எம். ஏ.
உலக அரங்கில், மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக்கூடியதாகவும், தொழிலாளர் பிரச்சினை வளர்ந்துவிட்டது. நீதியையும் நேர்மையையும், சமுதாயத்தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும், தொழிலாளர் பிரச்சினையை அலட்சியப்படுத்திவிடவோ, அல்லது அடக்கு முறைகளால் அழித்துவிடக்கூடுமென்றோ எண்ண முடியாது. பிரச்சினை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டும், புதுப்புது உருவங்களைக் காட்டிக் கொண்டும் இருக்குமே ஒழிய, தானாக மங்கிவிடவும் செய்யாது; தாக்குதலால் தகர்ந்தும் போய்விடாது. பொது அறிவும், ஜனநாயக உணர்ச்சியும் வளர வளர, பிரச்சினை பலம் பெற்றுக் கொண்டுதான் வரும். எனவே, தொழிலாளர் ஸ்தாபனத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டியது, பொறுப்புள்ள யாருக்கும் அவசியமானதாகிவிட்டது. ஸ்தாபன ரீதியாகப் பிரச்சினைகளைக் கவனித்து, முடிவு செய்யும் எண்ணமும் ஏற்பாடும், இப்போது எங்கும் பரவிவிட்டது. எந்த ஸ்தாபனமும், ஐக்கியத்தை, ஒற்றுமையைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே, வலிவுடன் விளங்கும், பயன்விளையும். ஆகவே, ஸ்தாபன ஐக்கியத்தைக் கவனித்தாக வேண்டும்.
ஸ்தாபனம்—அதாவது அமைப்பு—பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொது இடம்—ஓர் பாசறை. பாசறையிலே, பலவிதமான போர்க்கருவிகளும் வீரர்களும் தேவை—கருவிகளின் எண்ணிக்கையும் வகையும் வளர்ந்துகொண்டு இருக்கவேண்டும்—பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால் வாள் மட்டும் போர் குவித்து வைத்துக்கொண்டு, கேடயம் தேடாமல் இருப்பதோ, விற்களைக் குன்றெனக் குவித்துக்கொண்டு அம்புகள் இல்லாமலிருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்து வைக்துக்கொண்டு வெடி மருந்து தேடாமலிருந்து விடுவதோ, இவை யாவும் ஒழுங்காகவும் தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுள்ள வீரர்கள் இல்லாதிருப்பதோ, வீரர்கள் இருந்தும், இவர்-