2
களை நடத்திச் செல்லும், படைத்தலைவன் இல்லாதிருந்தால், பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலைபோல இருக்குமே தவிர பயன் தரும் மனிதராக இருக்க முடியாது.
ஸ்தாபனம், ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகிறது. ஸ்தாபனம், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகிறபோது, அந்த ஸ்தாபனத்தின் பலன், அந்தக் கொள்கைகள் வெற்றிபெற அந்த ஸ்தாபனம் ஆற்றல் பெறுவதைப் பொறுத்தே இருக்கிறது. கொள்கைகள் ஏற்படுவதே, உள்ள குறைகளைத் தீர்த்து வைப்பதற்கோ, நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கோ, புதியதோர் நலனைக் காண்பதற்கோதான். தொழிலாளர்களின் ஸ்தாபனம், சில அடிப்படைக் கொள்கைகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால் தொழிலாளர்களின் சில பல குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்குத்தான்.
பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தொழில் முறை மாறிவிட்டது. உலகிலே, அதற்கு முன்பு எந்த நாட்டிலும், குடிசைத்தொழில் முறையும், தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்திச் செய்துகொள்வது மட்டுமே இருந்து வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின்போது, தொழிற்புரட்சி ஏற்பட்டுக் குடிசைத்தொழில் முறைமாறி, யந்திரத்தொழில் முறையும், ஒரு சிலர் பலரை வேலைக்கமர்த்தி, தொழில் நடத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பண்டங்களை விற்று, இலாபம் பெறுவதுமான முறை வளர்ந்தது. இதனால் ஓரிடத்தில் ஏராளமானவர்கள் கூடித்தொழில் செய்யும் முறையும், அந்தத் தொழிலில் இலாபம், தங்களுக்குக் கிடைக்கும் கூலிபோக மீதமிருக்கும் பகுதி வேறிடம் போவதும், தொழிலாளர்களுக்கு விளங்கலாயிற்று. இந்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டதும், தொழிலாளர்கள், முதலில் தங்கள் விதி, வினை, முதலாளிகளின் புண்ணியம், ஆகியவற்றைப்பற்றி எண்ணி, தங்கள் மனதுக்கு ஆறுதலைத் தேடிக் கொண்டதுடன், தங்களுக்கும், பயபக்தியுடன் நடந்துவந்தால், ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காய்ந்த வயிற்றையும், கடமை உணர்ச்சியுடன் தாங்கள் பாடுபடுவதையும் எடுத்துக்காட்டி, தொழில் அமைத்தவர்களின் நல்லுணர்ச்சிக்கும், தயாள குணத்துக்கும் மனுப்போட்டு, அதனால் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர். இந்த முறை நெடுநாட்களுக்குப் பயன் தரவில்லை. சிலருடைய தயாள குணத்தினால், ஒரு பெரிய கூட்டத்தில் வளர்ந்து வரும் தொல்லைகளைப் போக்கிவிட முடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்-