பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


முறையில், பணி உண்டு என்ற முறையில், ஸ்தாபனத்தை நடத்திச் சென்றால், ஸ்தாபன ஐக்கியம் கெடாது. பலனும் நிச்சயம் விளையும். ஸ்தாபனத்தின் பலம் வளரும்போது ஏற்படும் அல்லலைவிட, ஸ்தாபனத்தின் பலம் வளர்ந்த பிறகு ஏற்படும் அல்லல் அதிகம்—ஸ்தாபனம் வளரும்போது இருக்கும் ஸ்தாபன ஐக்கியம், ஸ்தாபனம் நன்றாக வளர்ந்த பிறகு, ஓரளவு ஆபத்துக்குள் சிக்கிவிடக்கூடும்—வளர்ந்துள்ள பலத்தைக்கொண்டு என்ன செய்வது? எவ்விதம் அதைச் செய்வது? யாரைக்கொண்டு செய்வது? எப்போது செய்வது? என்ற பிரச்சினைகள், ஸ்தாபனத்தின் பலம் வளர்ந்த பிறகு ஏற்படும். ஐக்கியத்துக்கு ஆபத்து அதனால் வரக்கூடும். அந்த நெருக்கடியான நேரத்திலெல்லாம் ஸ்தாபனத்தின் மூலக்கருத்துக்கே முதலிடம் தரப்படவேண்டும் அப்போதுதான் ஸ்தாபனம் சிதையாமலிருக்கும்—ஸ்தாபன ஐக்கியம் ஒருமுறை பாடுபட்டுச் சாதித்துவிட்டு, அதைக் கண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டு, இனிக் கவலையில்லை என்று இருந்துவிடக்கூடிய ஒரு சம்பவமல்வ—எப்போதும் விழிப்போடு இருந்து கொண்டு அவ்வப்போது பழுது பார்த்துக்கொண்டு எந்தச் சமயத்திலும் மூலக்கருத்து கெடாதபடியும் கவனித்துக்கொண்டு இருந்தால் மட்டுமே காப்பாற்றக்கூடிய, ஒர் அற்புதமான ஜீவசக்தி, ஸ்தாபனத்தின் பலமும் பயனும், அந்த ஐக்கியத்தை—ஒற்றுமை உணர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது. வீணை உயர்தரமானதால், வித்துவானும் தேர்ந்தவர் தான். ஆனால் ஒரு நரம்பு மட்டும் ஒரிடத்தில் தளர்ந்து இருக்கிறது என்றால், வீணையின் நாதமும் கெடும்; வித்துவானின் இசையும் பாழ்படும். ஸ்தாபனத்தின் ஐக்கியம் சங்கீதத்துக்கு உள்ள சுருதி ஞானத்தைப் போன்றது—மிக மிக ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

[இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க
உரிமை தந்த சென்னை வானொலி நிலையத்தாருக்கு
எமது நன்றி.]