5
மனிதன் கஷ்டம் அனுபவித்தபோது, மிதவாதிகள் அவனுடைய கண்ணையும் கருத்தையும், எந்த உண்மைக் காரணத்தால் மனிதன் கஷ்டப்படுகிறானோ அந்தக் காரணங்களைக் காணவொட்டாமல் தடுத்து கைலாயம், வைகுந்தம், காகுந்தன், காளியாயி, ஜெபமாலை, உடுக்கை, இப்படி வேறுபல பொருள்கள், முறைகள் மீது திருப்பி விட்டனர். மனிதன் திக்குத் தெரியாத காட்டைப் போலானான். எனவேதான், அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் தோற்க வேண்டி நேரிட்டது. எடுத்துக்காட்டாக ஒன்று கூறுகிறேன், கூலி உயர்வுக்காகவோ, போனசுக்காகவோ ஒரு தொழிலாளர் சங்கம் போராடுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம். பாட்டாளி, கூட்டம் முடிந்து வீடு போகிறான்.
மனைவி கேட்கிறாள், ‘வேலை கூடத்தான் இல்லையே, எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறீர்கள், மணி பத்தாகிறதே...’
‘அவன், பைத்தியமே இன்று மீட்டிங்கு’ என்று சொல்லுகிறான்.
‘அதுதான் இருக்கிறதே ஒவ்வொரு தினமும்’ சலித்த குரலில் மனைவி கூறுகிறாள்.
‘வள்ளி வர்க்கப் போராட்டம் நடக்கிறது. இதிலே பாட்டாளி வர்க்கந்தானே ஜெயிக்கும்’ என்று அவன் கூறுகிறான். அன்று கேட்ட சமதர்மப் பிரசாரத்தின் ஆர்வத்தால். என்னமோ பொன்னியம்மாள் புண்ணியத்தாலே அந்த முதலாளி மனது மாறி, ஏழைகள் மேல் இரக்கங் காட்டவேணும், பரம்பரைப் பழக்கத்தால் வள்ளி கூறுகிறாள் இதுபோல.
இவ்விதம் இருவிதமான முறைகள், ஒன்றிற்கொன்று நேர்மாறானவை பேசப்படுகின்றன. ஒரே குடும்பத்தில் ஒரே ஒரு இலட்சியத்தைப் பெற, இந்த முரண்பாடு ஒழிக்கப்பட்டால்தான் சுவையுள்ள அந்த இலட்சியத்தை நடைமுறையில் வெற்றிகரமாக்கிக் காட்டமுடியும். எனவேதான், மனதிலே உள்ள தளைகள் அறுபட்டால்தான் சமதர்மத்திற்குள்ள தடைகள் ஒழிக்கப்படும் என்று அறிவியக்கம் கூறுகிறது.