பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


இவைகளைச் செய்யவேண்டும். அதற்கான உறுதிவேண்டும். செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும். இதற்கு முழக்கங்கள்—பவனிகள் கடை அடைப்புக்கள் போதா. முறையும் திறமும், வழியும் வகையும் வேறு; நிச்சயமாக வேறுதான். வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்ட வேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாக வேண்டும். உடல் உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்க வேண்டும். வாலிபர்கள் பாலம் அமைக்க, நீர்த்தேக்கம் அமைக்க உழவு முறையே மாற்றப் பணி புரியவேண்டும். பழமையின் பிடியிலிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்துப், புதுமையின் சோபிதத்தைக் காட்டிப் புத்துலகு அமைக்கவேண்டும் வாலிபர்கள். இதற்கான திறமும் தீரமும் தேவை. அறிவு ஆராய்ச்சி தேவை. இதற்கான வெளி உலகத் தொடர்பு தேவை. இதற்கான பண்பும் பயிற்சியும் மிக மிகத் தேவை. இந்தக் காரியத்தை முதியோர்கள் செய்யட்டும்; இவை மிக்க சோர்வளிக்கக்கூடிய காரியங்கள்; நாம் போரிட; எதிர்த்துத் தாக்க; தீயில் குளிக்கவேண்டிய காரியங்களைச் செய்வோம் என்று வாலிபர்கள் இருந்துவிடக் கூடாது. பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்ட முடியாது. அவர்கள் தீட்டியான பிறகு கோபிப்பது வீண்வேலை.

அந்தப் பணியினை வாலிபர்கள் புரியும்போது, பழமை பயங்காட்டும்; வைதீகம் மிரட்டும்; ஜாதி எதிர்க்கும்; சம்பிரதாயம் சீறும்; குருட்டுக் கோட்பாடுகள் முரட்டுப் பிடிவாதங்கள், அர்த்தமற்ற பற்று பாசங்கள், இவைகளெல்லாம் இருண்ட மண்டபத்திலே வட்டமிடும் வௌவால்கள் போலக் கிளம்பும். உற்றார் உறவினர், அண்ணன் தம்பி, பெற்றோர் பெரியவர்கள், எங்கெங்கிருந்தோ, எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்பும். இவைகளைக் கண்டு அஞ்சாமல் அயராமல், பணி புரியும் பண்பு வாலிபருக்குத் தேவை. அதற்குத் தெளிவு வேண்டும். எங்கெங்கு இவைகளை எப்படி எப்படி எல்லாம் செய்திருக்கிறார்கள் என்று அறிந்து செய்யவேண்டும். அதற்கு வெளி உலகத் தொடர்பு வேண்டும். இவைகளைச் செய்கையில் ஏற்படக்கூடிய