பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


—வாய் கூசாது எப்படிப் பொதுச் சேவையென்று கூறுவது? கூறினால் பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? சேலை விற்றுச் சீமானாகிறான் ஓர் வியாபாரி. செய்தியை விற்றுச் சீமானாகிறான் இந்த வியாபாரி—பத்தாயிரம் முதல் போட்டுப் பட்டாடை கடை வைத்துப் பத்தின் மூலம் அறுபதுவரை லாபம் கண்டான் ஒரு முதலாளி—அது போலவே, பத்தோ எட்டோ முதலாக வைத்துப் பத்திரிகையைத் துவக்கியவர் பத்தாயிர ரூபாய் மோட்டாரும், நாற்பது ஐம்பதாயிரத்தில் மாளிகையும், இலாபத்தின் மூலம் பெறுகிறார்கள். அவருடைய தொழிலை மட்டும். பொதுச்சேவை என்று எப்படிக் கூறுவது? ஏன் கூறவேண்டும். கூறுவது எப்படிப் பொருத்தமாகும்?

ம. பொ. சி  :– எங்கள் சொந்தத் தறியில் தயாரித்தது; சாயத்துக்கு உத்தரவாதம், என்று ஜவுளிக் கடைக்காரர் தமது தொழிலுக்குச் சிறப்புரை கூறி, விற்பனையை அதிகப்படுத்துவது போலவேதான் எங்கள் பத்திரிகைக்கு, விசேஷ, பிரத்தியேக நிரூபர்கள் உண்டு. பாரிஸ் மாநாட்டுக்குத் தனி நிரூபரை அனுப்புகிறோம். செய்திகள் பூரணமாக வெளிவருவது எங்கள் பத்திரிகையில்தான், என்று சிறப்புரை கூறி பத்திரிகையைப் பரப்புகிறார் அந்த வியாபாரி. செய்திகளைப் பண்டமாகவே கருதுகிறார். செய்திகளைத் திரட்டுவதற்குச் செலவாகும் தொகை, மற்ற வியாபாரத்தில் பொருள் செய்வதற்கு ஆகும் தொகை போலத்தான்...இலாபத்துக்கே செய்திகளும் விற்கப்படுகின்றன. இது சொந்தத் தொழில்...இலாபந் தருந் தொழிலாகத்தான் ஆகிறது.

அண்ணா  :– மேல் நாடுகளிலே உள்ள பத்திரிகைகள் ஒவ்வொன்றும் பலப் பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. இலாபம் ஏராளமாகத்தான் குவிகிறது.

ம. பொ. சி  :– பத்திரிகைகள் இலாபமான தொழில் என்பதறிந்து, பல சீமான்களே அங்குப் பத்திரிகைச் சொந்தக்காரர்களாகி உள்ளனர்—ஒரு சீமான் பல பத்திரிகைகளை நடத்துகிறார் சீமையில்—அமெரிக்காவில்.

அண்ணா  :– ஏன், இங்கே மட்டுமென்ன? நமது நாட்டிலும் முதலாளிகள் பல தொழில்களிலே பத்திரிகைத் தொழிலும் ஒன்று என்று கண்டு கொண்டார்கள். இலாப ருசி அவர்களைப் பத்திரிகைத் தொழிலிலேயும் கொண்டு வந்துவிட்டது.

ம. பொ. சி  :– ஆமாம்! இலாபம் வெண்ணெய் விற்றுச் சம்பாதித்தாலென்ன? சுண்ணாம்பு விற்றுச் சம்பாதித்தாலென்ன? இலாபம் இலாபந்தானே?