பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


களுக்குப் பிறகு. பல முறை திகைத்திருக்கிறான். பலமுறை தியாகத் தீயிலே குளித்திருக்கிறான். பயணம் மட்டும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது. வீழ்ந்தவர் போக, மற்றவர்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினர்; வெற்றியும் பெற்றனர்.

உயர்ந்த ஜாதிக்காரர், கொழுத்த பணக்காரர், தேர்ந்த தந்திரக்காரர், மிகுந்த வலிவுள்ளவர் என்று எந்தக் காரணத்தைக் கொண்டாகிலும் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழி அமைந்து விடுமானால், அங்கு ஏட்டிலே எவ்வளவுதான் சிறந்த முறையில் சுதந்தரத்தின் கோட்பாடுகள்—சாசனம்—தீட்டப் பட்டிருப்பினும், உண்மையான சுதந்தரம் மலராது—நிலைக்காது.

ஒரு சிலர், உயர்ந்த ஜாதியினர் என்று கூறப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு, அந்த நம்பிக்கை முறியாதிருக்க ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு விடுமானால், பிறகு அவர்கள் மற்ற மக்களைத் தமது இஷ்டம் போல் ஆட்டிப் படைக்க முடியும். செல்வத்தால் கிடைக்கும் சக்தியைக் கொண்டு சுதந்தரத்தைச் சூறையாடி விட முடிகிறது. இவரை எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும்? அவர் நம்மைப் பணத்தாலேயே அடித்தும் கொன்றும் விடுவார் என்ற அச்சம் பிடித்தாட்டும்போது, சுதந்தரமாகச் சிந்திக்கவோ, நடந்து கொள்ளவோ எப்படிச் சாத்தியமாகும்?

எனவே, மனிதருக்குள் பேதத்தையும் அச்சத்தையும் மூட்டக்கூடிய, வளர்க்கக்கூடிய எந்த ஏற்பாடும், சுதந்தரத்தின் பரம விரோதிகளே.

ஜெபமாலை, இரும்புப் பெட்டி, எதைக் கருவியாகக் கொண்டாலும், சரி, இவைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்கு மட்டும் மனித சுதந்தரம் பறிக்கப்பட்டுத் தான் போகும். இத்துடன், மக்களாட்சிக் காலத்திலே கூர்மையாகிவிட்ட, பேனா முனையும் சேர்ந்து விட்டால், சுதந்தரத்தைச் சுலபத்திலே சூறையாடிவிட முடிகிறது.

பேச்சுச் சுதந்தரம், எழுத்துச் சுதந்தரம், மதச் சுதந்தரம், ஏட்டில் இருக்குமளவுக்கு நடை முறைக்கு வருவதில்லை.