6
கைதி, எதிர்பாராதது, பலிபீடம், தொழிலாளி, சிறைச்சாலை, மறுமணம், இப்படிப் புதிய புதிய நாடகங்கள்—எல்லாம், மனித இயல்புகளை, நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டும் புதுமை நாடகங்களாக நடத்தப்படுகின்றன! பத்தாண்டுகளுக்கு முன்பு, பத்தினிப் பெண்ணின் பண்பை விளக்க, அவள் மாண்டு போகவேண்டும், நாடகத்தில்—இப்போது தவறி விட்டாள் ஒருத்தி என்றால், ஏன் என்று அனுதாபத்துடன் ஆராய்கிறான் கணவன் நாடகத்தில்!—நான் குறிப்பிடுவது ஒன்று புராணம், மற்றொன்று சமூக நாடகம் கூட அல்ல, இரண்டும் சமூக நாடகங்களே. இரண்டும் ஒரே நாடகக் கம்பெனியாருடைய நாடகங்கள்! பத்தாண்டுகளுக்கு முன்பு, பத்தினிப் பெண் மாள்கிற முறையிலே கதை அமைத்தால்தான் முடியும் நாடகம் நடத்த—அதற்குமேல் ஜீரணமாகாது! எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, அந்தக் கதையைப்பற்றி நடிக நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தது. ஏன் அந்தப் பெண் இறந்து படவேண்டும்— வாழட்டுமே, வாழ்ந்து காதலை மதிக்கத் தெரியாத கயவனுக்குப் புத்தி புகட்டட்டுமே, அது போலக் கதை இருந்தால் என்ன என்று கூறினேன்—நாடு ஏற்குமா, ஏற்காதா என்பதல்ல பிரச்சினை—அவரே அதை ஏற்கத் துணியவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கம்பெனியில், சூழ்நிலையால் தாக்கப் பட்ட தையலின் துயரக் கதையை நடத்திக் காட்டும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது சாவு அல்ல—மன்னிப்பு—அதுவும் கணவனால்—அதிலும் அவன் தேவன் என்பதால் அல்ல—மனிதன் ஆகையால்!
இவ்வளவு மகத்தான மாறுதல், நாடக மேடையில்.
தவறிவிடும் மனைவி, துரோகமிழைக்கும் நண்பன், இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம், மன்னிப்புத் தருவதுதான், மறுமலர்ச்சி என்று நான் கூறுவதாகக் கருதி விடவேண்டாம். அப்படிப்பட்ட மனிதர்களை—குடும்ப நிகழ்ச்சிகளைக் காட்டி, சமுதாயச் சூழ்நிலையை விளக்கும் நாடகங்கள் இன்று நாட்டிலே நடத்தப்பட்டு, பொது மக்களின் பேராதரவைப் பெறுகின்றன என்றால், அதன் பொருள் என்ன என்று சிந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நாடகமேடையிலே, மனிதனைக் காண விரும்புகிறார்கள். மகேசன், மகரிஷி, மன்னன், மந்திரவாதி அவதாரங்கள், அடியார்கள், இவர்களைக் கண்டு கண்டு, கண்களுக்கும், கருத்துக்கும் சலிப்பு மிகுந்து விட்டது அந்தக் கதைகளிலே உள்ள கருத்துக்கள் சில புளித்து விட்டன; சில பொய்த்துப் போய்விட்டன. வேறு சில உலக மன்றத்திலே கேலிக்குரியனவாக்கப்பட்டு விட்டன; பெரும்பாலானவை, நடை முறைக்கு ஏற்றனவாக இல்லை. வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு விளக்கம் தருவதாகவோ, வாழ்க்கைச் சிக்கல்களைப்