பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அதிகமான் நெடுமான் அஞ்சி

போகின்றன” என்று அவள் கூறியபோது அரசனுக்கு வியப்புத் தாங்கவில்லை; “ஆ!” என்று மலைத்துப் போனான்.

“சுருங்கை வழியா? உனக்கு எப்படித் தெரியும்? எங்களுக்குத் தெரியவில்லையே!”

“இரகசியமாக இருக்கவேண்டுமென்றுதானே அதை அமைத்திருக்கிறார்கள்? உங்களுக்குத் தெரியும்படி இருந்தால் அதற்கு என்ன பெருமை?”

“நீ எப்படி அதை அறிந்தாய்?”

“நான் கோட்டைக்குள் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகமான் மனைவியோடு நெருங்கிப் பழகினேன். அதனால் எனக்குக் கோட்டையின் இரகசியம் தெரிந்தது. ஒரு சமயம் அந்தச் சுருங்கை வழியில் நானே அரசியுடன் போய் வந்திருக்கிறேன்.”

“ஓ! அப்படியா? அங்கே வேலை செய்தவள் இப்போது இந்த வஞ்சச் செயல் செய்வதற்கு என்ன காரணம்?” “ அதைக் கேளுங்கள். சொல்கிறேன்” என்று கூறித் தன் மேற்போர்வையை அகற்றிக் கீழே வைத்தாள். அரசன் அவளை நன்றாகப் பார்த்தான். நல்ல அழகி என்பதைத் தெரிந்து கொண்டான்.

“சொல்” என்று ஆவலோடு கேட்டான்.

“அந்தப்புரத்துக்கு நான் அடிக்கடி போய் வருவேன். ஒரு நாள் ஒரு கயவன் என்னைக் கண்டு சொல்லத் தகாத சொற்களைச் சொன்னான். நான் அரசியிடம் தெரிவித்து அவனை ஒறுக்கச் சொன்னேன். அவள் அதிகமானிடம் அந்தச் செய்தியைச் சொன்னாள். அவன் மிகவும் அலட்சியமாகப் பேசினான். மகளிர் கற்பைக் கிள்ளுக் கீரையைப் போல மதித்துப் பேசினான். அன்று நான் மேற்கொண்ட வஞ்சினத்தால், பிறகு அந்தப் பக்கமே போவதை ஒழித்தேன். மகளிரைப் பாதுகாவாத