பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. போர் மூளுதல்


கடூர்க் கோட்டைக்குள்ளே இதுகாறும் இருந்த அமைதி இப்போது குலைந்தது.உண்மையான ஆபத்து இப்போதுதான் வந்து நிற்கிற தென்று அதிகமான் உணர்ந்தான். சுருங்கை வழியைப் பகைவர்கள் அடைத்தது தெரிந்து, அவர்களுக்கு அவ்வழிஎப்படித் தெரிந்தது என்று ஆய்ந்தான்.அதைப்பற்றிஇப்போது ஆராய்ந்து பயன் இல்லையென்று விட்டுவிட்டான். இனிமேல்தான் மெய்யான போருக்கு ஆயத்தம்செய்ய வேண்டும். இனியும் கோட்டைக்குள் நெடுநாள் தங்க முடியாது. பட்டினி கிடந்து வாடிக் கதவைத் திறப்பதற்கு முன்னாலே, உடம்பில் வலிமையும் போர்செய்யத் துடிக்கும் தோள்களும் உள்ளபோதே போரைத் தொடங்க வேண்டியதுதான். இந்தச் செய்தியை அதிகமான்படைத்தலைவர்களைக் கூட்டி அறிவித்தான். அவர்களின் வாயிலாகப் படை வீரர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சிதான். “நல்ல வேளை! இப்போதாவது நம் தினவு தீரும் சமயம் வந்ததே!” என்று பெருமிதம் கொண்டார்கள்.

இரண்டு நாட்களில் கோட்டைக் கதவைத்திறந்து கொண்டு அதிகமான் படை புறப்பட்டது. முரசுகள் முழங்கின. கொம்புகளை ஊதினார்கள். வீரர்கள் போர் முழக்கம்செய்தார்கள். பாலத்தின் வழியே வந்து சேரன் படையோடு கைகலக்கத் தொடங்கினார்கள். இதுவரையில் ஏதோ காவற்களம் போல இருந்த அந்த இடம் இப்போது முதல் தரமான போர்க்களமாகிவிட்டது. ஒரு பக்கம் பெரு வீரனாகிய அதிகமானுடைய படை; ஒரு பக்கத்தில் சேரமான் இரும்பொறையின் படை.