பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. அமுதக் கனி

அதிகமான் காட்டில் பல மலைகள் இருந்தன. குதிரை மலை என்பது ஒன்று. கஞ்ச மலை என்பது மற்றொன்று. இப்போது சேர்வைராயன் மலை என்று சொல்லும் மலையும் அவன் ஆட்சியில் இருந்தது. கஞ்ச மலையில் பல வகை மருந்து மரங்கள் வளர்ந்திருந்தன. மூலிகைகள் படர்ந்திருந்தன. முனிவர்களும் சித்தர்களும் அந்த மலையை நாடி வருவார்கள். சிறந்த மருத்துவர்கள் அருமையான மருந்துக்குரிய செடி கொடிகளைத் தேடி அந்தமலைக்கு வருவார்கள். வேறு இடங்களில் கிடைக்காத அரிய மருந்துச் செடிகள் அங்கே கிடைத்தன. கஞ்ச மலைச் சித்தர் என்ற அற்புத ஆற்றலுடையபெரியவர்ஒருவர் அந்த மலையில்வாழ்ந்திருந்ததாகப் பிற்காலத்தில் எழுந்த கதைகள் கூறுகின்றன.[1]

அந்த மலையில் மிகவும் அருமையான நெல்லி மரம் ஒன்று இருந்தது. தமிழ் மருத்துவத்தில் வல்ல அறிஞர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள். அது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே காய்க்கும்; பூத்துப் பிஞ்சு விடும்; ஆனால் பிஞ்சுகளெல்லாம் உதிர்ந்துவிடும். அதன் கனியை உண்டால் நரை திரை மூப்பின்றிப் பல காலம் வாழலாம். இதனை உணர்ந்த மருத்துவர்கள் அந்த மரத்தை அழியாமல் பாதுகாக்கவேண்டுமென்று அதிகமானிடம் சொன்னார்கள். அவன் அப்படியே அந்த மரத்துக்குத் தனியே வேலி கோலித்தக்க காவலாளரையும் அமைத்தான்.

ஒருமுறை அந்த மரத்தில் பிஞ்சுகள் உண்டாயின. அது கண்டு மக்களுக்கு நாவிலே தண்ணீர் ஊறியது.


  1. கொங்கு மண்டல சதகம், 42.