பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. படர்ந்த புகழ்


அதிகமானுடைய வீரத்தைப் பாடிய ஔவையார் அவனுடைய ஈகையையும் வெவ்வேறு வகையில் அழகாக விரித்துப் பாடினார். அவனை எத்தனை பாராட்டினாலும் அவருடைய நாத்தினவு தீரவில்லை.

ஒரு புலவன் அதிகமானை நோக்கி வருவான். தன் சுற்றத்தாரையும் அழைத்துக்கொண்டு வருவான். அவனையும் அவர்களையும் வரவேற்று உபசரிப்பான் அதிகமான். அவர்களுக்கு இனிய விருந்தளித்து மகிழ்வான். பல நாட்கள் தன்னுடனே இருந்து தனக்குத் தமிழ் விருந்து அளிக்க வேண்டுமென்று சொல்வான். அவர்களுக்குப் பலவகைப் பரிசில்களை வழங்கி, அவர்களைப் பிரிய மனம் இல்லாமல் விடை கொடுத்து அனுப்புவான். அப்புலவன் மீட்டும் வந்தால், “முன்பே வந்தவன்தானே?” என்று புறக்கணிக்கமாட்டான். பலமுறை வந்தாலும் அன்பில் சிறிதும் குறையாமல் பழகுவான். எத்தனை பேருடன் வந்தாலும் மனமுவந்து குலாவுவான். இந்தப் பண்புகளை ஔவையார் எடுத்துரைத்தார்.

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;
பல்நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ![1]

[செல்லலம்-காம் செல்லவில்லை. தலைநாள் போன்ற -முதல் நாளில் காட்டியதைப் போன்ற.]

தமிழ் நூல்கள் படிக்கப் படிக்கப் புதுமைச் சுவை உடையனவாகத் தோன்றும் என்று புலவர்கள் கூறுவார்கள். தமிழ்ப் புலவர்களோடு பழகப் பழக அவர்கள்


  1. புறநானூறு, 101.