பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அதிகமான் நெடுமான் அஞ்சி

அகன்ற வாணாய் இருக்கிறது. சோறு வாங்கிச் சாப்பிட வைத்திருப்பது அது. அதைக் கவிழ்த்து வைத்திருக்கிறாள். அதை நிமிர்த்திப் பிடிக்க யாரும் ஒன்றும் கொடுக்கவில்லை.

வழியில் இளைப்புற்று அவள் உட்கார்ந்திருக்கிறாள். அப்போது அவளை மற்றொரு விறலி சந்திக்கிறாள். இசைக் கருவிகளைக் கொண்டு அவள் விறலியென்று வந்தவள் தெரிந்து கொள்கிறாள்.

“ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்?” என்று கேட்கிறாள் வந்த விறலி.

“இவ்வளவு நேரம் நடந்து நடந்து சலித்துப் போனேன்; இங்கே உட்கார்ந்தேன். என்னுடைய பாத்திரத்தை நெடுநாளாகக் கவிழ்த்திருக்கிறேன்; அதை நிமிர்த்த யாரையும் காண முடியவில்லை” என்று அயர்ச்சியுடன் விடை கூறுகிறாள் ஏழை விறலி.

“அடடா! உன் வறுமையைப் போக்கும் பெருமான் ஒருவன் இருக்கிறான். அவனிடம் போ. அவனும் நெடுந்துாரத்தில் இல்லை. அருகில்தான் இருக்கிறான். இப்போதுதான் நல்ல சமயம். போனால் நிறையப் பொருளும் பொன்னும் கிடைக்கும்.”

“யார் அவன்? எங்கே இருக்கிறான்?”

“அவன் பெயர் அதிகமான் நெடுமான் அஞ்சி. அவன் தன் பகைவர்களோடு போரிட்டு அவர்களை அழித்து அவர்கள் ஊரைச் சுட்டு எரித்துவிட்டான். அப்படி எரிந்தபுகை அவனுடைய யானைகளைச் சுற்றித் தவழ்கிறது. அதைப் பார்த்தால் குன்றைச் சூழ்ந்த மஞ்சுபோலத் தோன்றும். பல வேல் வீரர்களுக்குத் தலைவனாகிய அஞ்சி போரிலே முகந்துகொண்ட பொருள்களோடு தன் நகரை அடைந்துவிடுவான். அதற்குள் நீ அவனிடம் போய்ச் சேர். அவனால் உன் வறுமை தீரும்.”