பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அதிகமான் நெடுமான் அஞ்சி

னுடன் வெறுப்பின்றி வாழும் கற்புடைய மகளாதலின் அவனை அவள் வெறுக்கவில்லை. இதை அவளுடைய தோழி கண்டாள். தீய ஒழுக்கத்தையுடைய ஆடவனிடம் கோபத்தைக் காட்டினால்தான் அவன் திருந்துவான் என்பது அத்தோழியின் எண்ணம். ஆனால் அந்தப் பெண் மணியோ சிறிதும் வருத்தத்தையோ வெறுப்பையோ காட்டாமல் அவனை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டாள். இதை அறிந்த தோழி அந்த மங்கை நல்லாளைப் பார்த்து, “ஒன்றோடு ஒன்று பிணங்கிச் சிக்கலாகப் பிரம்புகள் குளத்தில் வளர்ந்திருக்கின்றன. அவற்றில் கனிகள் பழுத்திருக்கின்றன; வளைந்து தொங்குகின்றன. ஆழமான நீரையுடைய குளத்திலுள்ள மீன்கள் அந்தப் பிரப்பம் பழங்களைக் கவ்வுகின்றன. இந்தக் காட்சியை உடைய துறைகள் பல இந்த ஊரில் உண்டு. இத்தகைய ஊரிலுள்ள தலைவனுக்கு எதிர் பேசாது அவன் செய்யும் கொடுமைகளுக்கெல்லாம் உட்பட்டுப் பொறுத்து, அவனை ஏற்றுக்கொள்ளும் கற்பிற் சிறந்த பெண்டாட்டியாக நீ இருக்கிறாய், இப்படியே இருந்து கொண்டிருந்தால் என்ன ஆகும் தெரியுமா? அவன் தன் போக்கிலே போவதை நிறுத்தமாட்டான். இதை நீ தெரிந்து கொள்ளாமல் நல்ல பெண்டாட்டியாகவே இருந்தால், எனக்கென்ன? உன் நெஞ்சிலே உண்டாகும் துயரம் பலவாகட்டும்! நீ உன் அவல நிலையை எண்ணி எண்ணித் தூக்கம் வராமல் கிடப்பாயாக! நீ தூங்குகிற நாட்கள் சிலவாக இருக்கட்டும்!” என்று சொன்னாள். அவள் சொல்வதாகப் பாட்டு அமைந்திருக்கிறது.

அந்தப் பாட்டில் அதிகமானுடைய ஈகையையும் வீரத்தையும் ஔவையார் எப்படி இணைத்தார் தெரியுமா? “நீ தூங்குகிற நாட்கள் சிலவே ஆக இருக்கட்டும்” என்னும் போது, ஓர் உவமை கூறுகிறாள் தோழி.