பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அதிகமான் நெடுமான் அஞ்சி

என்று தோழி கேட்கிறாள். “அதைவிட மிக்க இனிய வகை இருக்கிறான். வேகமான ஓட்டத்தையுடைய குதிரையையும் உயர்ந்த தேரையும் உடைய அதிகமான் நெடுமான் அஞ்சியினுடைய நல்ல புகழை நிலை நிறுத்திய, யாவரும் விரும்புதற்குரிய பாடல்களுக்குப் பழைய மரபில் வரும் இசையை அமைத்த புகழ்பெற்ற பாண் புலவன், கணக்குப் பண்ணி அமைத்த பண்களுக்குள்ளே, தானே புதியதாகப் புனைந்து அமைத்த திறங்கள் மிக்க இனிமையுடையன. அவற்றைக் காட்டிலும் இனிமையுடையவன் என் கணவன்” என்று சொல்கிறாள். இந்த உவமை வாயிலாகப் பாண்மகனார் இசை வகுத்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தாள் நாகை.

கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்இசை நிறுத்த நயவரு பனுவல்
தொல்இசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.[1]

[கடும்பரி - விரைவான நடையையுடைய. இசை நிறுத்த - புகழை நிலை நிறுத்திய. நயவரு-விருப்பம் உண்டாகின்ற. பனுவல் - உருப்படிகளின் தொகுதி. தொல் இசை நிறீஇய-பழைய முறைப் படி அமைந்த இசையை வகுத்த. உரைசால்-புகழ்மிக்க. எண்ணு முறை நிறுத்த-எண் ணின் வரிசையாக வகுத்த. திறத்தினும் இனியன், வதுவை காளினும் இனியன் என்று தனித்தனியே கூட்டவேண்டும்.]

அதிகமான் அத்தை மகளாகிய நாகையும் அவனைப் பாடிப் பரவினாள்.


  1. அகநானூறு, 352