பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அதிகமான் நெடுமான் அஞ்சி

அவர்களையும் சேர்த்துக்கொண்டு போரிடலாம். சிறிது கர்லம் சென்றாலும் அதிகமான எதிர்க்கும் தகுதி பெற்ற பிறகே போரைத் தொடங்குவோம். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இனி ஒவ்வொரு கணமும் இந்தப் போரைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பேன். இரவில் தூக்கமின்றி இதே கவலையாக இருப்பேன். உம் யோசனைகளை அவ்வப்போது சொல்லி வரவேண்டும்.”

அது முதல் பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினான். அது மிகப் பெரிய போராகவே இருக்கும் என்பதில் அவனுக்குச் சிறிதும் ஐயம் உண்டாகவில்லை. அதற்கு ஏற்றபடி விரிவான வகையில் ஆவன செய்ய முற்பட்டான். தன் படை வீரர்களில் இடையிலே சென்றவர்களையெல்லாம் அழைத்துவரச் செய்தான். “அணிமையில் போர் செய்யவேண்டி நேருமாகையால் ஒவ்வொரு குடியிலும் உள்ளவர்களில் வலிமையும் பருவமும் உள்ள ஆடவர்கள் உடனே வந்து படையில் சேரவேண்டும்” என்று யானையின்மேல் முரசை வைத்து அறையச் செய்தான். அது கேட்ட காளையர் பலர் வந்தனர். படைக்கலக் கொட்டிலில் உள்ள கருவிகளையெல்லாம் செப்பம் செய்வித்தான். படை வீரர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கக் கட்டளையிட்டான். “எங்கே போர் ? யாரோடு போர்?” என்பதை மட்டும் யாரும் அறியாமல் மந்தணமாகவே வைத்திருந்தான். ஒற்றர்களை அனுப்பித் தகடூரில் உள்ள அமைப்புக்களையும் படையின் அளவு முதலியவற்றையும் தெரிந்துகொண்டு வரும்ப்டி ஏவினான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருந்தான்.

இதற்குள் காரி அங்கங்கே மறைவாகத் தங்கியிருந்த தன் வீரர்கள் சிலரை ஆள் விட்டு அழைத்து