பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரின் தொடக்கம்

73

சென்றால் தானே கோட்டையைத் தாக்கலாம்? கோட்டையோடு ஒட்டி ஆழமாக இருந்தது அகழி. கோட்டை மதிலுக்கும் அதற்கும் இடையே வெளியிருந்தால் அங்கே நின்று கோட்டையை இடிக்கலாம். அதற்கும் வழியில்லை. கோட்டை வாயில்கள் உள்ள இடங்களில் புதிய பாலங்களை அமைத்துச் சென்று யானைகளைக் கொண்டு கதவுகளை மோதிச் சிதைக்கலாம். பாலம் போட என்ன வழி? பெரிய பெரிய மூங்கில்களைக் கொண்டுவந்து போட்டுப் பாலம் கட்டவேண்டும் அதற்கு நேரம் ஏது? மூங்கில்களுக்கு எங்கே போவது?

‘அகழி ஒன்று இருப்பது நமக்கு நினைவு இல்லாமற் போயிற்றே!’என்று அவன் வருந்தினான். கோட்டையை முற்றுகையிடும்படி நேரலாம் என்பதையே அவன் எண்ணிப் பார்க்கவில்லையே! நேருக்கு நேர் போர்க்களத்தில் கை கலப்பதாகவே அவன் கற்பனை செய்திருந்தான். கோட்டை மதிலின் உயரத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச் செறிந்தான். கீழ் இருந்தபடியே சில அம்புகளை எய்யச் சொன்னான்.

அடுத்த கணம் உள்ளே இருந்து சோனாமாரியாக அம்புகள் வந்து விழுந்தன. ஏப்புழைகளின் பின்னிருந்து வீரர்கள் குறி பார்த்து அடித்தமையால் அம்புகள் சேரமான் யானைகளின்மீது வந்து தைத்தன. கோட்டையிலே பாதுகாப்பாக இருந்தார்கள் அதிகமான் வீரர்கள். அயலான் ஊரில் திறந்த வெளியில் இருந்தனர் சேரமான் படை வீரர்கள். முதலை தண்ண்ரீரில் இருந்தால் அதை யாரும் வெல்லுவது அரிது; யானையையும் இழுத்துவிடும். அது கரையில் வந்தாலோ எளிதிலே கொன்றுவிடலாம். அதிகமான் தண்ணீரில் இருந்த முதலையைப் போல இருந்தான். பெருஞ்சேரல் இரும்பொறையோ தரையிலே கிடந்த முதலை ஆனான்.