பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அதிகமான் நெடுமான் அஞ்சி

காத்துக் கொள்வதுதான் இப்போது முதல் வேலை. அது எளிதேயன்றி அருமையான காரியம் அன்று. எல்லாப் படைகளும் அங்கே போய் நிற்க வேண்டியதும் அவசியம் அன்று.”-இவ்வாறு காரி கூறினான்.

“ஏன்?” என்று தலை நிமிர்ந்து கேட்டான் சேரன்.

“அதிகமான் படைகள் நேருக்கு நேர் நின்றால் அப்போது நம் படைகள் முழுவதையும் எதிரே நிறுத்த வேண்டும். இப்போது சரியான முறையில் போரா நடக்கிறது?அவன் உள்ளே பாதுகாப்பாக இருக்கிறான். நாம் வெளியிலே நிற்கிறோம். சில படை வீரர்களைக் காவலர்களைப் போலக் கோட்டையைச் சுற்றி நிறுத்தினால் போதும். உடம்பு முழுவதும் மூடும் கவசங்களை அணிந்து அகழியினின்றும் நெடுந்துாரம் தள்ளி நின்றால், மேலிருந்து வரும் படைக்கலங்களால் ஒன்றும் செய்ய இயலாது. நாம் போரை இன்னும் தொடங்கவே இல்லையே! என்று காரி கூறினான்.

“பொறியில் அகப்பட்ட எலியைக் கண்டு வெளியில் வரட்டும் என்று பார்த்து நிற்கும் நாயைப் போல நாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீரா?” என்று சேரமான் கேட்டான்.

“அந்த உவமை ஒரு விதத்தில பொருத்தமானது தான். உள்ளே இருப்பவனை வெளியிலே இழுத்துவர ஏதாவது வழி உண்டானால் செய்யலாம்.இல்லையானால், இந்தக் கோட்டையையும் அகழியையும் சூழ்ந்து நின்று காவல் செய்வதுதான் இப்போது செய்யக் கூடியது.” காரி கூறுவது நடைமுறைக்கு ஏற்றதென்பதைச் சேரமான் உணர்ந்தான். அத்தனை படைகளையும் குவித்துக்கொண்டு கோட்டையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பது பேதைமை என்பது அவனுக்குத் தெளிவாயிற்று. காரியின் சொற்களை ஏற்றுக்கொண்டான்.