பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முற்றுகை

79

வெளியிலே நிற்கிறோம். சேரநாட்டிலிருந்து உணவுப் பொருளை நாம் வருவித்துக் கொள்ளலாம். உள்ளே இருப்பவர்களுக்கு வெளியிலிருந்து சென்றாலன்றி வழி இல்லை. கோட்டையைத் திறந்தால்தானே வெளி உணவு உள்ளே செல்லும் ?”

நெடுங்கேரளன் தலையைக் குனிந்துகொண்டான். பிட்டங் கொற்றன் , “உணவுப்பொருளை நம் நாட்டிலிருந்து வருவிப்பதற்கு முன்னரே, மூங்கில்களையும் வருவிக்க வேண்டும். அவை வந்துவிட்டால் நாம் பாலம் போட்டுக் கோட்டையைத் தகர்க்க முயற்சி செய்யலாம்” என்றான்.

“உம்முடைய யோசனை என்ன ?” என்று மன்னன் காரியை நோக்கினான்.

“மூங்கில் பாலம் போட்டுப் போரிடுவது எளிதன்று. கோட்டையை அணுகினால் அவர்கள் மேலிருந்து பாறையை உருட்டி விடுவார்கள். அவர்களைப் பட்டினி போட்டு வெளியிலே வரச் செய்வதுதான் தக்கதென்று தோன்றுகிறது.”

காரியின் சொற்கள் எப்போதுமே ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக வருபவை என்பதை அரசன் உணர்ந்தான்; மற்றவர்களும் உணர்ந்தார்கள். அவன் கூறியபடியே முற்றுகையை நீட்டித்தார்கள்.

பத்து நாட்கள் ஆயின; இருபது நாட்கள் ஆயின. சேரன் பொறுமையை இழந்தான். “நான் வஞ்சிமா நகர் செல்கிறேன். நீங்கள் இருந்து போரை நடத்துங்கள்” என்றான்.

காரி உடனே பேசினான்: “அப்படிச் செய்வது தவறு. அரசர் பெருமான் இப்போது இங்கிருந்து போய்விட்டால் அது தோல்வியை வரவேற்பதுபோல ஆகிவிடும். படை வீரர்களுக்கு ஊக்கம் குறையும். எதற்காகத் தாங்கள் போகிறீர்கள் என்பதை அவர்கள் தெளிய மாட்டார்கள்; ஐயம் அடைவார்கள். காத்தது