பக்கம்:அநுக்கிரகா.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அதுக்கிரகா

ஆவாரம்பட்டு முத்தையாவின் பங்களாவை ஒட்டி இருந்த காலியான புறம்போக்கு நிலத்தில் 'பார்க்' ஒன்று அமைக்கும் திட்டம் இருந்தது. 'பார்க்' அவசியமில்லை, பூங்காவுக்குப் பதில் வீடற்றோருக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு சாரார் அபிப்பிராயப்பட்டனர். இப்படி அவர்கள் பூங்காவா, வீட்டு வசதியா என்று முடிவு செய்யுமுன்பே புறம்போக்கு நிலத்தில் தாறுமாறாகக் குடிசைகள் முளைத்துக் கிளம்ப ஆரம்பித்தன, முத்தையா வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் சாத்தினாற் போலவே பலர் குடிசைகள் போட ஆரம்பித்தனர். சுகாதாரம் கெட்டு அரண்மனையாக விளங்கிய முத்தையாவின் பங்களாவைச் சுற்றிக் கொசு, சாக்கடை எல்லாம் தேங்கி நாற ஆரம்பித்தது. 'ஆவாரம்பட்டு ஹவுஸ்' மதில் சுவர் ஓரங்கள் திறந்த வெளிக் கழிப்பிடங்களாக ஆயின.

முத்தையா நகர அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் கடிதம் மேல் கடிதம் எழுதிப் போட்டும் பயனில்லை. "தொகுதி எம். எல். ஏ.யைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லுங்க. உடனே நடக்கும்," என்று சிலர் சொல்லவே முத்தையா அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான கனிவண்ணனைப் பார்ப்பதா வேண்டாமா என்று தயங்கினார்.

குடிசைகளைக் காலி செய்துவிட்டுப் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்குவதைத் துரிதப்படுத்தும்படி எம்.எல்.ஏ.யை முடுக்கி விடலாம் என்றுதான் முன்னாள் ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர். முத்தையா பி.ஏ.பி.எல். அவனைச் சந்திக்கச் சென்றார். அவர் நிலைக்கு, கூப்பிட்டனுப்பினாலே வரக்கூடிய அவனை அவர் தேடிப் போனார்.

மரியாதையும், பண்பாடும் பரம்பரைப் பெருந்தன்மையும் உள்ள முத்தையாவுக்குக் கனிவண்ணன் வீட்டில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. சந்தையிலோ, கருவாட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/10&oldid=1267812" இலிருந்து மீள்விக்கப்பட்டது