பக்கம்:அநுக்கிரகா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99

முதலில் கொஞ்சம் கலாட்டா கூப்பாடு, கல்லெறி ரகளைகளும். அவை ஓய்ந்த பின் அப்புறம் பட்டாசு வாண வேடிக்கைகளும் தடபுடல் பட்டன.


15


வெற்றி ஊர்வலம் முடிந்து அநுக்கிரகா வீடு திரும்பும் போது காலை மணி நான்கு. மகளை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார் முத்தையா.

"உடனே போய்ப் படும்மா. ரொம்பக் களைச்சுப் போயிருக்கே, கொஞ்சம் தூங்கு. விடிஞ்சதும் மத்ததைப் பேசிக்கலாம். பொன்னுரங்கம் அன்னிக்கு உறுப்பினர் அட்டையைக் கொடுத்த நல்ல வேளைதான்...நீ ஜெயிச்சாச்சு. அவனுக்கு உன் கையாலே ஸ்வீட் குடு" என்றார்.

அவள் இரண்டு கைகளாலும் சாக்லேட்டை வாரித் தாராளமாக அவனிடம் கொடுத்தாள்.

பொன்னுரங்கம், "அம்மா எப்பவும் இப்படியே எதையும் கைநிறைய எடுத்துக் குடுக்கிற மாதிரி மகராசியா இருக்கணுங்க." என்று அதை இரு கைகளாலும் வாங்கிக் கொண்டான்.

முத்தையா அநுவைப் பின்தொடர்ந்து, அவள் காதருகே சென்று, தணிந்த குரலில் "தூக்கம் வரலேன்னா கொஞ்சம் பிராந்தியைக் குடிச்சிட்டுத் தூங்கும்மா. உடம்பு அசதிக்கு இதமா இருக்கும். தூக்கமும் உடனே வரும்" என்றார்.

"நான் பார்த்துக்கறேன் அப்பா. குட் நைட்", என்று அவள் படுக்கப் போனபோது, குட் மார்னிங் ஆகியிருந்தது. அவரும் சிறிது கண்ணயரலாம் என்று தமது படுக்கையறைக்குச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/101&oldid=1263989" இலிருந்து மீள்விக்கப்பட்டது