பக்கம்:அநுக்கிரகா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

103

"இந்தக் கட்சியிலே பொம்பளைன்னு வந்தா, அவங்களுக்கு எதுவும் உடனே முடியுதுப்பா," என்று அவர்கள் காதில் விழுகிறாற் போலவே ஒருவன் முணுமுணுத்தான். திரும்பிக் காரில் போகும் போது, "நல்ல சகுனம் தெரியுதுங்க, நம்ம பாப்பா மந்திரி ஆகிறது நிச்சயங்க," என்று உறுதியான குரலில் சொன்னான் பொன்னுரங்கம்.

“எதை வச்சுச் சொல்றே? மந்திரி பதவியைப் பற்றித் தலைவர் எதுவும் சொல்லலியேப்பா?"

நான் இவங்கதான் நம்ம பார்ட்டியோட பொம்பிளை எம்.எல்.ஏ.க்களிலேயே அதிகம் படிச்சவங்கன்னு சொன்னப்ப அவரு உடனே, அதிகம் படிச்சவங்க மட்டுமில்லே! ரொம்ப அழகானதும் இவங்கதாம்ப்பா'ன்னு சிரிச்சிக்கிட்டே ஒரு போடு போட்டாரு பாருங்க. அங்கே தான் இருக்கு சூட்சுமம்! பாப்பாவை அவருக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு."

"என்னைக்கூட ஞாபகம் வச்சிருக்காரேப்பா! ஜஸ்டிஸ் பார்ட்டியிலே முக்கியப் புள்ளியா இருந்தீங்கன்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டாரே?"

"நல்ல ஞாபக சக்திங்க. எதையும் மறக்க மாட்டாரு."

அநுக்கிரகா மட்டும் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

"நீங்க என்னம்மா யோசிக்கிறீங்க? தைரியமா இருங்க. மந்திரிப் பதவி உங்களுக்குத்தான்."

"ஸ்டேட் முழுவதும் ஜெயிச்சவங்க லிஸ்ட்டைப் பார்த்தா, மொத்தம் என்னையும் சேர்த்து ஆறு லேடி மெம்பர்ஸ். அதிலே ரெண்டு பேர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவங்க. மத்த நாலுபேர்ல பார்ட்டியிலே என்னை விட மத்த மூணு பேர் ரொம்ப நாளா இருக்கிறவங்க. சீனியர் மெம்பர்ஸ்——மூணுவாட்டி எம். எல்.ஏ. யாத் தொடர்ந்து இருந்தவங்க."

"அதனாலே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/105&oldid=1263993" இலிருந்து மீள்விக்கப்பட்டது