பக்கம்:அநுக்கிரகா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

109

களே அப்படி ஆகியிருந்தான் சைக்கிள் கடைப் பொன்னுரங்கம்.

சர்.வி.டி. முத்தையாவுக்கு எல்லாமே கனவு போல் தோன்றியது. அநுக்கிரகா எம்,எல்.ஏ. ஆகி மந்திரியும் ஆகப் போகிறாள். அதுவும் அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய ஹவுஸிங் மந்திரியாகவே ஆகப் போகிறாள். கனிவண்ணனைப் பழி வாங்கியாயிற்று. அரண்மனை - போன்ற ஆவாரம் பட்டு ஹவுஸ் மாளிகையைச் சுற்றி முளைத்திருக்கும் குடிசைகள் அகன்று தென்றல் வீசும் சிங்காரப் பூங்காவாக உருவாகப் போகிறது. முத்தையா பொன்னுரங்கத்தைக் கேட்டார் :

"ஏம்பா பொன்னுரங்கம்? இது எப்பிடிப்பா? ஹவுஸிங் மினிஸ்டர்னு நீயா நியூஸ் குடுக்கறே? அதை உங்க தலைவரோ, கட்சி ஆளுங்களோ சந்தேகப்பட்டுத் தட்டிக் கேட்க மாட்டாங்களா?"

"தலைவர் விருப்பம் அதுதானோ என்னவோன்னு தொண்டருங்க கேட்கவே மாட்டாங்க, கட்சித் தொண்டருங்க விருப்பம் இது தானோ என்னமோன்னு தலைவரும் கேட்காம விட்டுடுவாரு. எங்க கட்சியிலே தலைவரைப் பார்க்கிறதே குதிரைக் கொம்பு! மீறிப் பார்த்தாலும் சாமி கும்புடற மாதிரிக் காலைத் தொட்டு விழுந்து கும்பிட்டுட்டு ஓடியாந்துடுவாங்க. பேசவோ, கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது. தலைவர் பக்கத்திலே சமதையா உட்கார்ந்து, 'அவங்களை ஏன் எம்.எல்.ஏ. ஆக்கினீங்க? இவங்களை எப்பிடி மந்திரியாக்கலாம்?' என்றெல்வாம் தட்டிக் கேட்க யாருமே கிடையாது, அதனாலே தான் என்னாலே சுளுவா இதெல்லாம் பண்ண முடிஞ்சுது."

பொன்னுரங்கத்தின் அனுபவஞானத்தை வியந்தார் முத்தையா. அவனே மேலும் கூறினான். இதெல்லாம் பண்ணியும் கூடப் பிரயோசனமில்லே! கைக்கெட்டினது வாய்க்கு எட்டாமப் போகவும் நேரிட்டுறலாம். எப்படித் தெரியுமா?" அவன் இப்படிக் கேட்டதும் துணுக்கென்றது அவருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/111&oldid=1264006" இலிருந்து மீள்விக்கப்பட்டது