பக்கம்:அநுக்கிரகா.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

111


எளியவர்கள் வீட்டுக்குத் தீ வைத்து அழிக்கும் இவர்கள் தான் நாளைய வீட்டு வசதி மந்திரியாம், வீடுகள் பிழைக்குமா? குடிசைகள் தப்புமா? குப்பங்கள் வாழுமா? பரிதாபம்! பரிதாபம்!'- என்று போஸ்டர் போட்டு உங்கள் சான்ஸைக் கனிவண்ணன் முனைந்தால் கெடுக்க முடியும். அது தான் பயமாக இருக்கிறது. எதற்கும் பயப்படாத நானே அவனுக்குப் பயப்படறேன். கனிவண்ணனைக் கட்சியிலேர்ந்து தூக்கினப்புறம் மாம்பழம்கூட நமக்குப் பயப்படுகிறான். வாலாட்டறது இல்லே. ஆனா, கனிவண்ணன் வெளியில் போயிட்டதாலே என்மேலே, அவனைத் தோற்கடிச்ச உங்கமேலே எல்லாம் பயங்கரமான கோபத்தோட இருக்கான், எதுவும் பண்ணுவான். எப்படியும் உங்க சான்ஸைக் கெடுக்கப் பார்ப்பான்."

"இப்படியெல்லாம் கூட வக்கிரமாகச் செய்வாங்களா? உன் கற்பனையா?"

"கற்பனையாவது கத்திரிக்காயாவது? கனிவண்ணனைத் தெரிஞ்சவங்களுக்குத்தான் இது புரியும். நிச்சயமா இப்பிடியெல்லாம் நடக்கும். ஆனா, இதை முந்திக்கிட்டு முறியடிக்க ஒரு வழி இருக்கு."

"என்ன வழி அது?"

"உங்க வீட்டைச் சுத்தி இருக்கிற ஸ்லம் உட்பட எல்லாக் குடிசைப் பகுதிகளிலேயும் நாமே நம்ம ஆளுங்களையும், தொண்டருங்களையும் விட்டு ராப்பகலா அசம்பாவிதம் எதுவும் நடக்காம ரோந்து சுத்தணும். தோல்வி விரக்தியில், தோற்றுப்போனவர்கள் -அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப் போடவில்லையே என்ற ஏமாற்றத்தில் எந்த வினாடியும் உங்க குடிசைகளுக்கு நெருப்பு மூட்டலாம். ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க, நாங்களும், தொண்டர்களும் உங்களுக்கு உதவிடக் காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் அன்பைப் பெற்று— உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ, அநுக்கிரகா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/113&oldid=1264015" இலிருந்து மீள்விக்கப்பட்டது