பக்கம்:அநுக்கிரகா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அநுக்கிரகா

தினருமே இங்கு இருக்கிறார்கள். இது கூடாது" — என்றார்.

ஆனால் அவர் சொன்னதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதாகி விட்டதால் உளறுகிறார் என்றார்கள். புத்தி தடுமாறிவிட்டது என்றும் கூறினார்கள். "இந்த வயசு காலத்திலே எதுக்குக் கோட்டை கொத்தளம் மாதிரி அத்தனை பெரிய வீட்டிலே தனியாக் கெடந்து சாகறாரு? பேசாம மகளோட போய் மாண்புமிகு அமைச்சரின் தந்தைங்கிற மரியாதையோட அங்கே இருக்கலாமே?"

"ஈவன் அட் திஸ் ஏஜ் ஹி இஸ் டூ இண்டிபெண்டன்ட் தட் ஈஸ் த ரியல் பிராப்ளம் வித் ஹிம்."

"ரொம்ப முரண்டுக்காரக் கிழவன் ஐயா."

இப்படி அவரைப் பற்றிப் பலர் வாயில் பலவிதமான பேச்சுக்கள் கிளம்பின. அநுக்கிரகாவைக் குறை கூறியும் சிலர் கண்டித்தனர். "இவ்வளவெல்லாம் பண்ணி வளர்த்து ஆளாக்கின தகப்பனைத் தனியே அவள் தவிக்கவிட்டது பாவம்தான்" —என்றார்கள் சிலர்.

ஆனால் அநுக்கிரகா மட்டும் மனசு கலங்கவோ, உணர்ச்சிவசப்படவோ, சலனப்படவோ செய்யாமல் இருந்தாள். தந்தையிடமிருந்து விலகியும் ஒதுங்கியும் வேறுபட்டுமே இருந்தாள்.

ஆனால் ஒரே ஒருநாள் மட்டும் அவளாலேயே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அமைச்சர் என்ற முறையில் இல்லாவிட்டாலும் அவரது மகள் என்ற முறையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவாவது அப்பாவை நேரில் ஒரு நிமிஷம் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வர எண்ணினாள் அவள். அரசாங்கங்கள், ஆளும் கட்சிகள், எஸ்டாபிளிஷ்மெண்டுகளின் பயங்கர விமர்சகரும், எதிரியுமாகிய அவரை அமைச்சராகிய தான் சென்று பகிரங்கமாகப் பார்ப்பதால் எதுவும் பாதகம் நேர்ந்து தன் பதவிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்று பயந்து கட்சித் தலைவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/126&oldid=1265109" இலிருந்து மீள்விக்கப்பட்டது