பக்கம்:அநுக்கிரகா.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

47

விட்டார். அப்புறம் கைத்தறித் துண்டு போடுகிறவர்களின் பட்டாளம். மறுபடி மாலைக்குப் பதிலாக ரூபாய் நோட்டு அளிக்கிறவர்களின் வரிசை. அதில் ஒரு வேடிக்கை அநுக்கிரகாவுக்குத் தாத்தாவாக வேண்டிய வயதானவர் கூட அவளை 'அண்ணியார்' என்று தான் மேடையில் அழைத்தார். ஓர் அரை மணி நேரம் மாலை, துண்டு, ரூபாய் நோட்டுப் பேர்வழிகள் அவளைப் பேசவே விடாமல் 'டிரில்' வாங்கிவிட்டார்கள். அவளுக்கு இந்தக் களேப்ரத் தில் எல்லாமே மறந்து போய்விட்டது. .

கூட்டமோ அமைதியாக அவள் பேச்சைக் கேட்க எதிர்பார்த்துக் கர்த்திருந்தது. போர்க்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிராயுதபாணிபோல், 'இன்று போய் நாளை வா,' என்று யாராவது கருணை காட்ட வேண்டிய நிலையிலிருந்த அவளுக்குக் கையில் இருந்த ஒரே சிறு துரும்பு இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை தான். மூச்சைப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் தப்பும் தவறுமாகத் தட்டுத் தடுமாறி திக்கித் திணறி அதைப் படித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்துப் பயந்தது போல் கூட்டம் கேலியிலோ, பரிகாசத்திலோ , இறங்கவில்லை. ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கிற மௌனத்தோடு செவிமடுத்தது. நடுநடுவே மேடையிலிருந்து ' பொன்னுரங்கமே முதல் கைத்தட்டலைத் தொடங்கிக் கொடுத்துக் கூட்டத்தையும் கைதட்ட வைத்தான், மேடை சூட்சுமங்கள் அவனுக்கு அத்துபடி ஆகியிருந்தன.

"லண்டன்ல படிச்ச பொண்ணு இன்னா ஷோக்காத் தமிழ் பேசுது பார்த்தியா?

“பிரமாதம்ப்பா, கொன்னுட்டாங்க. போ.

"இனிமே இவுங்கதான் நம்ம மேடையிலே ஷ்டார் ஸ்பீக்கர்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/49&oldid=1256670" இலிருந்து மீள்விக்கப்பட்டது