பக்கம்:அநுக்கிரகா.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அநுக்கிரகா

மிராசுகளின் பட்டா வாரிசான பரம்பரை என்றும் 'கோடீஸ்வரக் கோமாளி' என்றும் முடிச்சவிழ்க்கும் முத்தையா' என்றும் சாடியிருந்தது.

படுகொலைக்குப்பம் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கும் போது மறவன் குரலில் இந்தக் கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரை வெளியிட்டவர்களே கவனமாகச் சிரத்தை எடுத்துக்கொண்டு அவருக்குத் தெரிவதற்காகப் பிரதியை அனுப்பியிருந்தார்கள். பொன்னுரங்கத்துக்கும் பிரதி அனுப்பப்பட்டு வந்திருந்தது. அவன் இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. துடைத்தெறிந்தாற் போல மூலையில் தூக்கி எறிந்துவிட்டுப் பேசாமல் இருந்தான். கண்டு கொள்ளவே இல்லை.

முத்தையா நாசூக்கான பணக்காரராகையினால் பொன்னுரங்கம் அளவு தோல் தடித்திருக்கவில்லை. நாலு பேர் படிக்கிற இந்த மூன்றாந்தரப் பத்திரிகையைப் பார்த்ததும் மிரண்டுபோனார். உடனே பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டனுப்பினர்.

"என்னப்பா இது? இப்படிக் கன்னாபின்னாவென்று எழுதறானுங்க?"

"கிடக்கிறான் வீட்டுத் தள்ளுங்க, சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது."

“அதெப்படி விட்டுட முடியும்? வக்கீலைப் பார்த்து என்னமாச்சும் பண்ணியாகணும், முடிச்சவிழ்க்கும் முத்தையாங்கிறானே, நான் யார்கிட்டேப்பா முடிச்சவுத்தேன்?"

“இவன் சர்டிபிகேட் கொடுத்துத்தானா உங்களுக்கு நல்ல பேர் வரணும்?"

"இல்லை தான். ஆனாலும் இவனுக்கு ஏதாவது பாடம் கற்பிச்சே ஆகணும், பொன்னுரங்கம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/58&oldid=1256773" இலிருந்து மீள்விக்கப்பட்டது