பக்கம்:அநுக்கிரகா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மதம் கொள்!' என்று மேடையில் பேசுவதிலும் உள்ள தமிழ்ப் பற்று, தமிழ் மொழி, கலாசாரம், தமிழ் இன மேன்மை என்ற வளர்ச்சி நோக்கில் செல்லாமல் தன்னலம், அதிகார வேட்கை, சூதாட்டம் என்பதாக நின்றதை நா. பா. அழுத்தமாகக் காட்டுகிறார். பேசும் அரசியல்வாதி, மக்களைச் சிங்கம், புலி, யானை என்ற விலங்குகளாக மதிக்கிற போக்கே இந்த நாட்டில் காணப்படுகிறதே அன்றி, மக்களை மக்களாக மதித்திடும் போக்கு அரசியலில் வளரவில்லை. அரசியலாளர்கள் பல்வேறு முகங்களைச் காட்டி வாணவேடிக்கை அரசியல் நடத்துகின்றனர். 'அடைமொழிகளின் அதிகக் கனத்தால் அவை சார்ந்து நிற்கும் வார்த்தைகளின் முதுகு முறிந்து போகிற மொழிநடை எப்படியோ ஒரு தொற்றுநோயாகப் பரவியிருந்தது' என்பது போன்ற அற்புதமான சமகாலத் தமிழ்ச் சமுதாய விமர்சனத் தொடர்கள் இந்த நாவலில் மிகுதி.

இந்த நாவலில் வரும் பல மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் நமக்குப் பலரை, பல சம்பவங்களை நினைவூட்டலாம். வாழ்க்கை யதார்த்தம் கற்பனை மெருகு ஊட்டப்பட்டுக் கலை யதார்த்தமாக நன்கு காட்டப்பட்டுள்ளது. இந்த நாவலில் —தமிழ்ச் சமுதாயத்தை அதன் அரசியல் பின்னணியில் அங்கதச் சுவையுடன் நா. பா. இதில் காட்டியுள்ளார். தமிழ்ச் சமுதாய அரசியல் சீரழிவிற்குள்ளான முகமாக—முகமூடிகளே முகங்களாகிப்போன அரசியலாளர்களின் விசுவரூபக் காட்சியாக—அநுக்கிரகா நாவல் உள்ளது. நம்முடைய சமுதாய அமைப்பில் அரசியலில் பங்கேற்கும் பெண்ணை எவ்வாறு பிறர் (ஆண்கள்) மதிப்பிடுகின்றனர் எனவும் நயமாகக் காட்டுகிறார். நல்ல அரசியல் விமர்சன நாவலான 'அநுக்கிரகா' தமிழ் நாவல் வரலாற்றின் முதிர்ச்சியைக் காட்டுவதாகும்.

சு. வேங்கடராமன்

மதுரை
08.11.'89.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/6&oldid=1265127" இலிருந்து மீள்விக்கப்பட்டது