பக்கம்:அநுக்கிரகா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அநுக்கிரகா


வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார் அவர்.

“நீங்க குடிசைகளைப் பத்தி நினைக்கிறதை எல்லாம் உங்க பாஷையிலே உங்களுக்கு இருக்கிற ஆத்திரம் ஆத்தாமையோட அப்பிடியே வெளியே சொன்னீங்களோ அதுவுக்கு எலெக்ஷன்ல 'டெபாசிட்' கூடத் திரும்பக் கிடைக்காது." என்று மீண்டும் வற்புறுத்தி, அவரை எச்சரித்து விட்டுப் போனான் பொன்னுரங்கம்.

முத்தையாவுக்குக் கையாலாகாத கோபம் உள்ளேயே குமுறியது. தாங்கள் பணக்காரர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மையாலேயே நியாயங்களைப் பேசாத பணக்காரர்களும், தாங்கள் ஏழைகள் என்பதாலேயே தாங்கள் பேசுகிற அநியாயங்கள் கூட எடுபடும் என்ற உயர்வு மனப் பான்மையிலுள்ள ஏழைகளும் உள்ளவரை இந்நாட்டில் வெறும் ஏழை பணக்காரர்களும் அவர்களிடையிலான பிரச்சினைகளும், அரசியல்களும் இடைத் தரகர்களும் அரசியல்வாதிகளும் தான் இருப்பார்கள். நல்ல மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. பேதமும் பொறாமையுற்ற மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுகிற எந்த ஏற்பாடும் இன்று இங்கு இல்லையோ என்றுகூட முத்தையாவுக்குப் பயமாயிருந்தது. 'பாப்பு லிஸ்ட்' போக்கினால் உண்டாகியுள்ள எக்ஸிமா போலப் படைபடையாக அரிக்கிற 'பாவனா சோஷலிசம்' வந்தால் தான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கும். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் அசல் சமத்துவம் வந்து விடாமல் கண்ணும் கருத்துமாகத் தடுத்துக் கவனித்துக்கொண்டிருந்தன.

அநுவைத் தனியே அழைத்துப் பொன்னுரங்கம் வந்து சொல்லிவிட்டுப் போன பிரச்சினையைப் பிரஸ்தாபித்த முத்தையா, மகளின் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டார். பொன்னுரங்கம் சொன்னது தான் சரி என்றாள் அநு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/80&oldid=1257588" இலிருந்து மீள்விக்கப்பட்டது