பக்கம்:அந்தமான் கைதி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

 நட : ஆமாம் கல்யாணமாகிவிட்டது, அதை நீயும் ஒப்புக் கொள்ளுகிறாயா? உன் இருதயம் அதை ஆதரிக்கிறதா?

பாலு : நான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உலகம் ஒப்புக்கொண்டுவிட்டது. இனி என்ன?

நட : உலகம் ஒப்புக்கொள்ளும், இந்த அக்ரம உலகம் எதைத்தான் ஒப்புக்கொள்ளாது? உலகமா ஒப்புக் கொண்டது-இல்லை. உலகத்தில் உள்ள மடையர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்.

பாலு : அதற்கு நாமென்ன செய்ய முடியும்?

நட : நாமென்ன செய்ய முடியுமா? எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது? நம்மைப் போன்ற வாலிபர்கள் துணிந்தால் அதைத் தடுக்க முடியுமா முடியாதா?

பாலு : முடியும். முடியாதென்று யார் சொன்னது!

நட : அப்படியானால் நீ என் தங்கையை மனப்பூர்வமாகக் காதலித்திருந்தும் அவளுக்கு ஏற்பட்ட இந்த அக்ரமத்தை ஏன் தடுத்திருக்கக் கூடாது? தடுக்க முடியா விட்டாலும் பரவாயில்லை. தடுக்கவாவது முயற்சி செய்தாயா?

பாலு : இதில் நான் என்ன செய்ய முடியும்? லீலாவே சம்மதித்துக் காரியம் நடக்கும்போது அதைத் தடுக்க எனக்கு என்ன உரிமையிருக்கிறது?

நட : பாலு! உன் குற்றத்தை நீ லீலாவின் மீது சுமத்தப் பார்க்கிறாய். பெண்களின் சம்மதத்தைக் கேட்டுக் கல்யாணம் செய்வதென்பதே நம் நாட்டு வழக்கமில்லையே! உடைந்து போகும் பொம்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/126&oldid=1072789" இலிருந்து மீள்விக்கப்பட்டது