பக்கம்:அந்தமான் கைதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

 லீலா : வேண்டாம் வேண்டாம்! உங்கள் தைரியம் எனக்குத் தெரியாதா என்ன? எதிரி இல்லாத இடத்தில் நீங்கள்...

பாலு : இருந்தால்தான் என்ன? நான் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக உன்னை நான் கல்யாணம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவார்; அவ்வளவுதானே. குற்றத்திற்குத் தண்டனையாகவும் அவர் சொல்லுக்காகவும் எதிர் பார்த்த உன்னை ஏற்றுக்கொள்வதுதான் எனக்குக் கஷ்டம்?

லீலா : ஆஹா ஹா! எவ்வளவு பெரிய தண்டனை! சாமர்த்தியத்தைப் பாருங்கள்!... சரி. அதிருக்கட்டும்; உங்கள் வாதி ஜம்பு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறான்?

பாலு : என் வாதியா! நம் இருவருக்கும் வாதி யென்று சொல்லு. மூன்றாவது முறையாக ஆறாவது பாரத்திலே இந்த வருஷமும் கோட் அடித்துவிட்டானென்று நான் முன்பே சொல்லவில்லையா? பிறகு இப்படியே பலரோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். இப்பொழுது உங்கள் மாமா இருக்கிறாரே திவான் பகதூர், அவருக்கு இவன் தான் அந்தரங்கக் காரியதரிசியாம்; கேட்கவேண்டுமா? இனி மேல் அவன்தான் திவான்பகதூர்.

லீலா : ஒஹோ! அதுதான் நிமிஷத்திற்கு ஒரு அலங்காரம் செய்துகொண்டு வீதியில் ஒரு நாளைக்கு நூறுதரம் ராஜ நடை நடக்கிறான் போலிருக்கிறது.

பாலு : என்ன! உங்கள் வீதிப்பக்கமா? உன்னிடம் எவ்வளவு அவமானப்பட்டாலும் அவனுக்குக் கொஞ்சங் கூட வெட்கமே இல்லையே!......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/35&oldid=1027112" இலிருந்து மீள்விக்கப்பட்டது