பக்கம்:அந்தமான் கைதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

 திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளைக்குத்தான் முதல் அழைப்பு. இதோடு தொலைகிறதா? நிலபுல விஷயமாக இந்தப் பண்ணைக்காரப் பயல்களோடு வேறே மாரடிக்க வேண்டியதாயிருக்கிறது. இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையிலே உங்களை வந்து பார்க்க எனக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?

காமா : சரி சரி. நேரமாச்சு, லீலா! நீ போய் சமயலுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய். முதலில் வெந்நீர் போடு.

(லீலா போகிறாள்)

பொன் : ஏன் காமு! லீலாவை ஏன் இப்படி ஒரு மூக்குப் பொட்டுக் கூட இல்லாமல் வைத்திருக்கிறாய் ஒரு வயதுப் பெண்ணை இப்படி வைத்திருக்கலாமா?

காமா : நான் என்ன அண்ணா பண்ணுவேன்! அவளையும் ஒரு காலத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் தங்கத்தாலேயே எழைச்சுத்தான் வச்சிருந்தேன். அப்போ அவள் ஒரு லக்ஷாதிபதியின் மகளாயிருந்தாள். (துக்கம் தொண்டையை அடைக்கத் துணியால் கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிறாள்) அந்தப் பாவி மனுஷன், இப்படி இதுகளை யெல்லாம் என் தலையிலே கட்டீட்டு இவ்வளவு சீக்கிரமாப் போயிடுவாருன்னா நெனச்சேன்?

பொன் : ஊம். என்ன செய்யலாம்! நானும்தான் ஆதியிலேயே இந்தக் கப்பல் வியாபாரம் வேண்டாம் வேண்டாமென்று அந்த மனிதருக்கு எவ்வளவோ சொன்னேன். கேட்டாரா! என்னமோ. அந்தக் கப்பலும் கவிழவேண்டும்; அதே கவலையால் அவரும் சாகவேனும்; உங்கள் குடும்பமும் இப்படி ஆக வேண்டும் என்று இருக்கே இனிமேல் இதற்காக அழுது என்ன பண்ண முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/40&oldid=1028559" இலிருந்து மீள்விக்கப்பட்டது