பக்கம்:அந்தமான் கைதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


நட : ரொம்ப சரி, அப்புறம்?

காமா : லீலா பேராலேயே பத்தாயிரம் ரூபாய் பாங்கிலே போடுறாராம்.

நட : அடடே ஏது லீலாவின் மேல் அவ்வளவு கருணை?

காமா : வேறே ஒன்னுமில்லை. லீலாவை அவரே கலியாணம் செய்துக்கிறேன்னு......

நட : அட போம்மா! சும்மா விளையாடுகிறாயே. அவருடைய அந்தஸ்து என்ன! நிலைமை என்ன! அவர் வந்து நம் வீட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வாரென்றால், இது நடக்கிற காரியமா என்ன?

பொன் : பார்த்தாயா! பார்த்தாயா காமு! மாப்பிள்ளை இதற்கு ஒன்றும் தடை சொல்லவே மாட்டார் என்று நான் அப்பொழுதே சொல்லவில்லையா?

நட : தடையாவது, பெரிய பிரபு, அதிலும் ஒரு திவான்பகதூர். அப்படியுள்ள தங்களே மைத்துனராக அடைய எந்த மடையனாவது ஆட்சேபிக்க முடியுமா?

காமா : கடவுள் கிருபையினாலே அப்படியே முடிஞ்சுட்டா எல்லாப் பெருமையும் ஒனக்குத்தான்.

நட : ஆமாம். எல்லாப் பெருமையும் எனக்குத்தான். அடடா இனிமேல் எனக்கென்ன குறைவு! இந்திர போகமே இங்கேதான்!

பொன் : சரி மாப்பிள்ளை. இனிமேல் வீணாக நாளைக் கடத்தக் கூடாது முகூர்த்தத்திற்கு ஆகவேண்டிய ஏற்பாடுகளைச் சீக்கிரம் செய்யவேண்டியதுதான்.

நட : ஆஹா அதிலென்ன தடை..... உம். அது சரி இப்பொழுது யார் யார் வந்திருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தானா? அல்லது......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/44&oldid=1028874" இலிருந்து மீள்விக்கப்பட்டது