பக்கம்:அந்தமான் கைதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


லீலா : இருக்கலாம். இருந்தாலும் பிறந்தது முதல் இணை பிரியாது வளர்ந்து, இடையில் பிரிய நேர்ந்தால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? மேலும் இவ்வளவு நாளாய் எங்களைத் திரும்பிக்கூடப் பாராமல் இருந்த என் மாமாவுக்கு இப்போது திடீரென்று எங்கள் குடும்பத்தின் மீது இரக்கம் பிறந்திருக்கிறது. அம்மாவும் அடிக்கடி அங்கே போக ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாலு : அதனாலென்ன? அண்ணன் தங்கை யென்றிருந்தால் ஒருகாலம் இல்லாவிட்டாலும் ஒருகாலத்தில் சேராமல் இருக்க முடியுமா? உன் அண்ணன்தான் பெரிய ரோஷக்காரர். ஏன்! இந்தச் சமயத்திலாவது ஒத்துப்போய் விஷயத்தை எடுத்துச் சொல்லிக் கேட்டிருந்தால் உன் மாமன், ஏதாவது உதவி செய்திருக்க மாட்டாரா?

லீலா : ஆமாம். அவர் உதவியை எதிர்பார்த்தால் நான் சாகவேண்டியதுதான்.

பாலு : ஏன்?

லீலா : அவருக்கு என்னை நாலாந்தாரமாகக் கல்யாணம் செய்து கொடுப்பதாய் இருந்தால், அவர் எந்த உதவியும் செய்யத் தயாராம்.

பாலு : என்ன! உன்னையா? உண்மையாகவா? இனி மேலா அவர் கலியாணம் செய்துகொள்ள விரும்புகிறார்? பேஷ்! அவருக்கு ஏதாவது கொஞ்சம் மூளைக் கோளாறு எதுவும்...... இருக்குமா?

லீலா : பத்து நாளைக்கு முன் ஒரு நாள் எதிர்பாராத முறையில் காரைப் போட்டுக்கொண்டு ஏக ஆடம்பரமாய் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/73&oldid=1069671" இலிருந்து மீள்விக்கப்பட்டது