பக்கம்:அந்தித் தாமரை.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153


நிலமும் அவனது உடைமையாக இருந்தது; வயிற்றுப்பாட்டுக்கு வழி கிடைத்தது. ஒன்றியாக இருந்தவனுக்குக் கை கொடுத்து, கை கொடுத்த அவனுடைய இல்லக்கிழத்திக்கும் படியளந்து, பின்னர் அக்குடும்பத்தில் மூன்று உயிர்கள் பிழைக்க வேண்டிய நிலமை உருவான நிலையிலும், மண் அவனை வஞ்சிக்கவில்லை.

இப்படிப்பட்ட இக்கட்டான கட்டத்தில் காலம் உருண்டது. அவன்வரை மண்ணுக்கு இதயம் இருந்தாலும், வானம் ஈவிரக்கமில்லாமல் போனது; மாரி பொய்த்தது. விளைச்சலில் மண் விழுந்தது; கடலைக் கொல்லையில் திடுதிப்பென்று 'பூச்சி' விழுந்தது; சாப்பாட்டுக்கு நெல் விலைக்கு வாங்க வேண்டியவன் ஆனான். தேவைப்பட்ட பணத்துக்கு வகை கூற, தேவைக்கு உதவவல்ல ஆலத்தம்பாடிக் காளைகள் இரண்டையும் புதுக்கோட்டைச் சந்தையில் விற்றுவிட்டான் அவன். தலைப்பிள்ளை ஆணாகப் பிறந்தது. கொள்ளைப்பாசம் வைத்திருந்தான். தாய்ப்பால் போதாமல், புட்டிப்பால் கொடுத்ததால், வயிற்றில் கட்டி வந்தது. கட்டியைக் கரைக்க வேண்டிப் பணத்தைக் கரைத்தான். அந்தப் பணம், அவனுக்குச் சொத்தாக இலங்கிய நூற்றெழுபது குழி-நிலம் தந்த பரிசு. நன்செய்யும் புன்செய்யும் பிறர் சொத்தாயின!

பட்ட காலிலே படும் என்பது பழமொழி. பிரமனும் அதை உய்த்துணர்ந்தான். தாலி ஏந்தியவள் இரண்டாம் தவணை கருத்தரித்தாள். ஆறாவது மாதத்தில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டது. பிறகு உடல் நலிந்தது; பொன்னம்மா பாயும் படுக்கையும் ஆனாள். மாங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு அவள் வண்டியில் கொண்டு செல்லப்பட்டாள். ஆபத்துக்கு உதவிய தெய்வமாக விளங்கியவன் கீழத்தெருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/155&oldid=1305189" இலிருந்து மீள்விக்கப்பட்டது