பக்கம்:அந்தித் தாமரை.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அழைக் பாக்கியத்தை-உரிமையை இக்கடிதமாவது தருகிறதே-அதுவரை நான் கொடுத்து வைத்தவன்தான்.

நீ என் உரிமை. ஆனாலும் அந்த உரிமையை நம் குழந்தை சூடாவின் முன் திரும்பப் பெற்றல்தானே உன் வாழ்வு-என் வாழ்வு-நம் வாழ்வு சீரடைய முடியும்?

உன் நிலையை நான் அறிவேன். என் நெற்றியில் வடிந்த ரத்தத்தைக் கண்டு நீ அடைந்த வேதனையை உன் முகம் சொல்லிக் காட்டியது. உன் கண்களில் கண்ணீரைக் கண்டேன். எனக்குக் கண்ணீர் பெருகியது. நான் என்ன செய்வேன்? நீதான் என்ன செய்வாய்?

அன்று சூடாவுக்குப் படம் காட்டித் திரும்பும் போது, என் வலதுக் கன்னத்திலிருந்த மருவைக்கண்டு சூடா கேட்டாள், ‘ஏன் ஸார், எனக்கு வலது கன்னத்திலே இருக்கிற மாதிரியே உங்களுக்கும் அதே வலது கன்னத்திலே புள்ளியிருக்குதே!’ என்று. நல்லவேளை, தத்துவ ஞானி பிராய்டின் பாரம்பரிய விளக்கத்தை அவள் அறிந்துக் கொள்ளும் பிராயம் வரவில்லை. ஆம், ருக்மிணி. என் வலது கன்னத்தில் இருக்கும் மருகம் குழந்தையின் அதே வலது கன்னத்தில் இருப்பதுதான் பிறப்பு ரகசியம்-பாரம்பரியத் தத்துவம். இந்த உண்மையைச் சூடா அறிய நேர்ந்துவிடுமானால்...?சூடாவின் சபதத்தை நான் அறிவேன். அவள் சொல்வது போல, தன் தந்தையின் தவறுக்குக் கொடுக்கும் தண்டனையை நான் தாராளமாக ஏற்கக் காத்திருக்கிறேன். ஆனால், எனக்கு ஒரே ஆசை-என் உயிர் பிரிவதற்குள் ஒருதரம் -ஒரே தரமாவது என் சூடா என்னை ‘அப்பா’ என்று அழைக்கக் கேட்டால் போதும். பிறவி புனிதம் பெற்று விடும். நான் ‘தந்தை’ என்ற பதவியை அடைந்து விடுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/27&oldid=1342779" இலிருந்து மீள்விக்கப்பட்டது