மனம்
பச்சைக் குழந்தையின் பாலமுதச் சிரிப்பைத் தன் இதழ்க்கடையில் ஏந்தியவாறு, நிலவு நெருடும் தாமரை வதனம் ஹோமத்தீக்குத் தலை வணங்கிய வண்ணம் வீற்றிருந்தாள் அவள். அழகு காட்டிய கூறைப்புடவையும், அந்தம் காட்டிய கொண்டைப் பூவும், மனம் ஏந்திய மான் விழி நேர்மையும், மணம் ஏந்திய பூவையின் நீர்மையும் அவனுக்குக் கண் கொள்ளாக் காட்சியாயின, சுயவேளை கூடிவந்தது. மூன்று முடிச்சுக்கள் இட்டான் அவன். அம்முடிச்சுக்களை அவள் ஏந்திக் கொண்டாள். தெய்வப் படைப்பின் புதிர் முடிச்சுக்கள் போலும் !
“தாத்தா!...ஏ, தாத்தோ!”
தாய்வாழையில் குலை தள்ளும் தார்களைப்போல, குரல்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து, ஒன்றோடு ஒன்றாக இணைந்து மோதி வெடித்துச் சிதறின.
குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் அந்தக் ‘கனவு மனிதரின்’ மோன நிலையை மாற்ற முடியவில்லை. அசைக்க முடியவில்லை. கடைசிப் பிரயோகமாக, பிஞ்சுக்கரங்கள் பல ‘அந்தச் சுகக் கன’ வைத் தொட்டன; துளைத்தன.
கனவு கண் விழித்தது!