பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க மாட்டாள்தான்! காரணம் இது: அவளுக்குத் தேங்காய் எண்ணெய் கட்டோடு பிடிப்பது கிடையாது. வெட்கத்தோடு கண்களை உயர்த்தினாள: “பாபு, சொல்றேன்; கேட்டுக்கிடு. ஒனக்குப் பிடிச்ச ரவாகேசரியும் நந்தினி அக்காள் விரும்புகிற வெங்காயப் பஜ்ஜியும் செஞ்சிருக்குது; அப்பறம், மலையாள நாட்டு விருந்தாடிங்களுக்காக கீரைவடையும் காத்திருக்குது!” பாபுவின் மறு கேலிப் பேச்சுக்குக் காத்திராமல், செவகி அங்கிருந்து நடையைத் தொடர்ந்தாள்.

பாபுவுக்குப் பாதங்கள் மண்ணிடை நிலைக்கவில்லை ஒட்டமாக உள்ளே ஒடிப்போய், ரவா கேசரியை ஒருகை பார்த்துவிடவேண்டுமென்கிற ஆர்வம் மேலிட்டது. பெற்றோர்களைப் பரிதாபமாகப் பார்த்தான் “கிளம்புங்க, போகலாம்,” என்று தூண்டினான். “டிஃபன் சாப்பிட்டானதும், உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போறேன்.” என்றும் முத்தாய்ப்பு வைத்தான்.

பாபு என்ன புதிர் போடுகிறான்?

ரஞ்சனிக்கு ஒன்றுமே புரியவில்லை.

ரஞ்சித்துக்கும் பிடிபடவில்லை.

அவர்கள் இருவரும் பாபுவை ஏக்கத்துடனும் உருக்கத்துடனும் பார்த்தார்கள்! பாபுவின் தரப்பிலிருந்து அந்த முக்கியமான விஷயத்தை அப்போதே வரவழைத்துத் தெரிந்துகொண்டு விடவேண்டுமென்ற ஆர்வத்துடிப்பு அவர்களது பார்வையில் பிரதிபலித்தது.

பாபு சாமான்யமான பிள்ளையா? அசையவில்லை; அசைந்துகொடுக்கவும் இல்லை. “வாங்க, போவோம்.” என்று கூறி, பெற்ற தாய் தந்தையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு முகப்பு மண்டபத்தைக் குறி வைத்து நடக்கத் தொடங்கினான்.

120