பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித்துக்கு அதிர்ச்சி ஏற்பட்டது; மறு நொடியில், அவரது இதழ்களில் புன்னகை விளையாடத் தொடங்கியது: “வீடு தேடி வந்த விருந்தாடிங்க, ஒரு ராத்திரி கூட இங்கே எங்களோடே தங்காமல் போனால், நல்லா இருக்குங்களா, மகேஷ்?... ஊகூம்; நான் உங்களை லேசிலே விட்டுட மாட்டேன்; என்னோட ரஞ்சனியும் உங்களை விட்டுட மாட்டாள்! நான் சொல்றதைக் கேளுங்க. இப்ப நாமா அதாகப்பட்டது, நீங்க, உங்க ரதி, நான், என் ரஞ்சனி, நம்ப பாபு...அப்புறம் எங்க நந்தினிக் குட்டி எல்லோரும் கொஞ்ச நேரம் டி. வி. பார்க்கிறோம்; ரேடியோ கேட்கிறோம்; பின்னே எல்லோரும் ‘டாஜ்’ போய் ஒரு ஸ்பெஷல் காஃபி சாப்பிடறோம்; பின்னே, நேரா மெரீனா போறோம்; அப்புறம் நாம் பங்களாவுக்குத் திரும்புறோம்: சாப்பிட்றோம்; ராத்திரி இங்கேயே படுத்துத் தூங்குறோம்; நாளைக்கு நீங்க கொச்சின் எக்ஸ்பிரஸிலே நாடு போறீங்க!” என்று ரஞ்சித் தமது திட்டத்தைத் திட்டவட்டமாக வெளியிட்டார். அவரது சொற்களில் அவருக்கே ஆகிவந்த அன்பு பண்புடன் வெளிப்படுத்தப்பட்டது. உதட்டுச் சிரிப்பில் தற்போது சிலிர்ப்பும் கூடியது; கூடிவந்தது. இடையிலே, ஒரு சலசலப்பு நிகழ்ந்துவிட்டது!- ஏதோ ஒரு சலனம்; சலனத்தின் ஆட்டபாட்டம்!-அன்புப் பரிமாறலில் இம்மாதிரியான சலசலப்பு ஏற்படும்போது, அந்த அன்பிற்குப் புதியதான அரும் பதவுரை கிட்டுமோ, என்னவோ?---தலையை உயர்த்தி மகேஷை நோக்கினார் அவர்,

ஆனால்:

மகேஷ் வழக்கம் போலவே இப்போதும் மெளனப் பிண்டமாகக் காட்சி கொடுத்தார். ரதியைப் பார்த்து, அவளது இணக்கமான முகக் குறிப்பை உணர்ந்து கொண்டவர் போல் ரஞ்சித்தை நோக்கினார்.

“ஊம், சரி சொல்லிடுங்க, மகேஷ்!” என்று கேட்டுக் கொண்டாள் ரஞ்சனி.

137