பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் நந்தினிப் பெண்,

“அ..த்..தான்!...”

மேனியின் சிலிர்ப்பை உணர்ந்தவராக, மெள்ள மெள்ளக் கண்களைத் திறக்கின்றார் ரஞ்சித்.

அம்பிகையான மஹாலக்ஷமி திரு அவதாரம் எடுத்த பாவனையில், கற்பூரத் தட்டும் கையுமாக வந்து நின்றாள் ரஞ்சனி. அவளுடைய கவர்ச்சி கனிந்து விழிகளும், உணர்ச்சி நிரம்பின உதடுகளும் சுடரொளியில் ஏற்றம் கூடின; ஏற்றத்தைக் கூட்டின.

ரஞ்சித் பார்த்த அந்தப் பார்வையில் இப்பொழுது ரஞ்சனியா தரிசனம் தந்தாள்?-ஊகூம்!-மஹாலக்ஷமி!... இரண்டு கைகளாலும் நிவேதனத் தீபத்தைப் பக்திப் பரவசத்துடன் ஒற்றிக் கண்களிலே ஒற்றிக்கொண்டார் அவர். பிறகு, தாம்பாளத்தில் இருந்த குங்குமத்தில் துளி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு நிமிர்ந்தபோது, தம்முன்னே உணர்ச்சிகள் சுழித்திட்ட நிலையிலே ரஞ்சனி---ஆருயிர் ரஞ்சனி தலையை நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார். உடல் புல்லரித்தது; உள்ளம் சிலிர்த்தது. ரஞ்சனியை அவருக்குப் புரியாதா, என்ன? நெஞ்சு நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் புரள, அவளை ஏற இறங்கப் பார்த்தார். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்திற்குள், அவர் நிதானம் அடைந்தார். பான்மையோடு புன்னகை செய்தவராக, தமது நுனி விரலால் மிளகுஅளவுக்குக் குங்குமத்தை எடுத்து, அவளுடைய செக்கக் சிவந்த நெற்றியில் இட்டார் ரஞ்சித். கைவிரல்கள் இப்பொழுது கொஞ்சங்கூட நடுங்கவில்லை!-எத்தனையோ நாட்களுக்கு முந்திய அந்த ஒரு மாலைப்பொழுதிலே, மிஸ்டர் மகேஷ் முன்னிலையிலே, அவர் தம்முடைய இன்னுயிர்த் துணையான ரஞ்சனியின் அழகான நெற்றியில் இதுபோலவே அம்மன் குங்குமத்தை

13