பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பந்தம் இருந்தாலாவது, நான் மனத்தைப் போட்டுக் குழப்பி கொள்ளலாம்-ஆனால், நான் யாரோ? மகேஷ் யாரோ?---‘சே!பெரிய சனியனாய் போச்சே? சே!’.

மறுபடி, அப்பா ‘சடுகுடு’ ஓடிவந்து மகனது பிஞ்சு நெஞ்சிலே குதித்தார். தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தந்தையைப் பற்றின பல்வேறு அன்பான பசுமை நினைவுகளில் மெய்ம் மறந்தான் அவன்; அவனுடைய விழிகள் கண்ணீரைக் கூட்டுச் சேர்க்க மறக்கவில்லை. அன்பான அப்பாவை அன்பாக நினைத்தவன், அம்மாவை மாத்திரம் அக்கணத்திலே நினைத்திட மறந்துவிடுவானா?---‘அம்மா, எந் தெய்வமே! முந்தித் தவம் கிடந்த உன்னோட அன்பான வயித்திபல முந்நூறு நாள் குடியிருக்கக் கூடிய பெரிய பாக்கியத்தை எனக்குத் தந்து, எனக்கு உசிரையும் உள்ளத்தையும் தந்த உன்னையே இன்னம் ஏழேழு பிறப்புக்கும் என்னோட தாயாக அடையக்கூடிய பாக்கியத்தையும் பொசிப்பையும் எனக்குத் தந்துப்பிடு, தாயே!’ அன்று உண்ட தாய்முலைப் பாலமுதம் இன்று நன்றியின் கண்ணீராகப் பெருக்கெடுத்து ஒடுகிறதோ?- ‘நீயே எனக்குத் தெய்வமாக ஆகிட்ட பிற்பாடு, நான் உனக்கு எப்படித் தெய்வமாக ஆக முடியுமாம், அம்மா?...நல்ல அம்மா...!’

பாபுப் பையனுக்குச் சொந்தமான அறையில் இப்போது பூத்திரை விலக்கி, வானத்துப் பால் நிலவு தவழத் தொடங்குகிறது.

செவகி அக்காவை அம்மா அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

“அம்மா!”-தனக்குத் தானாகவும் தன்னில் தானாகவும் அம்மாவை விளித்தான் பாபு!---‘பாபு, நீ என்னோட தெய்வம்; எனக்குத் தெய்வம் நீ; அதனாலேதான், நான் என் உயிரையே உன்கிட்டே பணயம் வச்சிருக்கேன். இப்படிப்பட்ட நிலைமையிலே, என் மனசான மனசை

175