பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லையும் சேர்த்து! சிரிப்பின் நிறம்; வெள்ளை; அது வெள்ளச் சிரிப்பும்கூட. வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த அத்தானைச் சிரிக்கச் சிரிக்கப் பார்வையிட்டவளாக, “டிபன் சாப்பிடலாம், வாங்க,” என்று அழைத்தாள். ரஞ்சனி.

பாங்கருக்கு ஆறுதலான ஆறுதல் கனியத் தொடங்கியது. கொண்டவளை விழுங்கிவிடுகிற மாதிரி பார்த்தார். பசியைப் போக்கிக்கொள்ளவா? இல்லை: பசியைத் தூண்டி விட! மணிமேகலை தன்னுடைய அமுதசுரபியை என் ரஞ்சனியிடம்தான் கொடுத்துவிட்டுப் போயிருக்கவேண்டும்! பிடிபடாத பெருமிதத்தைப் பிடிக்குள் நிறுத்தியவராக, மெல்லிய ஊதா நிற ஜிப்பாவில் சாண் வயிறு அண்டி ஒண்டிக் கிடந்த இடத்தைக் கனகச்சிதமாக அளந்தறிந்து தட்டிக் கொடுத்துக்கொண்டே ரஞ்சனியின் சிரிப்பைத் தொடர்ந்தவர், ரஞ்சனியையும் தொடர வேண்டியவர் ஆனார்.

ரவி வர்மா முதல் கே. மாதவன் வரை கொலு அமைத்துக் கொலு வீற்றிருந்த அந்த உணவுக்கூடம், ரஞ்சித்-ரஞ்சனி தம்பதியின் மிக அந்தியோன்யமான குடும்பச் சிநேகிதரான மகேஷின் மிகப் பெரிய பாராட்டுதலுக்கும் இலக்காகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்கு பக்கத்துச் சுவர்களிலும் திறந்து கிடந்த கண்ணாடி ஜன்னல்கள்: அந்த ஜன்னல்களின் அழகுக்கு அழகு செய்வதுபோல் இழுத்து விரித்து மறைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த பூத்திரைகள்.

கூடத்தில் சன்னமான நீலப் பாதரச ஒளி சிந்தியும் சிதறியும் கிடக்கிறது.

இளமையைக் கடந்திருந்த காற்று பனி வாடையையும் கடந்திருந்தது.

24