பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலே, ‘ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ பூக்கோலங்களுக்கும் மாக்கோலங்களுக்கும் இடைநடுவில், விஷப்பல் பிடுங்கி வீசப்பட்ட நாகமாக மின்காற்று ஒங்கார உறுமலைக் கக்கிக் கொண்டிருப்பதும் இயற்கைதான்.

பாங்கர் ரஞ்சித்துக்கு இந்த நந்தினி விலாசத்தில் மிக மிகப்பிடித்தமானது இந்த உணவுக்கூடம் ஒன்றேதான்!...

அதோ, ஊதுவத்தியின் இன்பச் சுகந்தம் அழகாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் மணம் சிந்திக்கொண்டே இருக்கிறது!.

ரஞ்சித் அழகை ரசிப்பவர் மட்டுந்தானா?-ஊஹூம்!-- அவர் அழகை ஆராதிப்பவரும் அல்லவா?

“உங்க டைனிங் ஹாலை வெள்ளம் ஒண்ணும் கொண்டு போயிடாதுங்க, அத்தான்; இட்டிலி ஆறிடப் போகுது; சாப்பிடுங்க!”

“உத்தரவு, டியர்!” மான் விழிகள் மருள்வதோடு, மயங்கவும் செய்கின்றன;

சின்னச் சின்ன இட்டிலி; கைப்பதமான சூடு; பச்சைக் கொத்தமல்லித் தளைகள் துணை இருந்த தக்காளிப்பழச் சட்டினி. அவர் சுவைத்தும் ருசித்தும் சாப்பிட்டார். ஆக, மொத்தம் சாப்பிட்டது பன்னிரண்டுதான். இது ஒன்றும் அதிகம் இல்லை. இன்னும் ஒன்றிரண்டு கூடுதலாகச் சாப்பிடத்தான் ஆசை. தீராத ஆசையுடன் ஆசை மனைவியை ஏறிட்டார்.

ரஞ்சனிக்கு என்னதான் அப்படி மாளாத-மீளாத சிந்தனையோ?

அவர் வாயைத் திறக்கவில்லை. நாக்கை நப்புக் கொட்டினார். ரஞ்சனி எங்கே இருக்கிறாளோ?

25