பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

இளவரசி வாழ்க


நடையாக நடந்து சென்று எழை எளியவர்களின் இடர்ப்பாடுகளைக் கண்டும் கேட்டும் அறிந்தும் உணர்ந்தும், தந்தையிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு ஆவன செய்த நிகழ்வுகள் ஒன்றா, இரண்டா?

இப்போது நாட்டின் குடிமக்களுக்கெல்லாம் புதிய ஆனந்தம் கிளைத்தெழுந்தாலும், புதிய குழப்பமும் உண்டாகாமல் இல்லை. பிறந்துள்ள வாரிசான பட்டத்து இளவரசு எப்படி இருக்குமோ என்ற கவலை அப்போதிருந்தே அரிக்கத் தொடங்கியது.

சரி!

இளவரசி கன்யாகுமரி தன் நினைவு பெற்றாள். பலதரப்பட்ட சிந்தனைகளினின்றும் விடுதலை பெற்றாள். பூஜை முடிந்து, பிரசாதங்களுடன் அங்கிருந்து புறப்பட்டாள். ஒருத்தியாகவே வந்து ஒருத்தியாகவே திரும்பினாள். இளங்கதிர்கள் சிவக்கத் தொடங்கின.

அன்று தன் தந்தையிடம் மனத்திலுள்ளதைத் திறந்து சொன்னது, அவளுக்கே வியப்பாகப்பட்டது. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகமில்லை என்பதை அவள் அறிவாள். தமிழ் மறை தந்த பாடல்களிலே அவளுக்கு மிகவும் பிடித்தமானது ‘அன்பின் வழியது உயிர் நிலை’ என்னும் குறள் அடியாகும். அவளுக்குக் கற்பித்த கவிஞர் தமிழேந்தி, பாடலுக்காக எத்தனை எத்தனை விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்!... கோமான் குவலயத் தலைவனான தெய்வத்திற்குச் சமதையென்றால், ஆண்டவன் பாராட்டாத அந்தப் பெருமை – சிறுமை, உயர்வு – மட்டம் போன்ற ஏற்றத் தாழ்வுகளை மன்னன் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்பதே அவளது அந்தரங்கக் கருத்தாகக் கனன்றது.