பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

இளவரசி வாழ்க


விரும்புகிறேன். அது எனது கடமையுங்கூட. இளவரசி அன்றொரு நாள் நீங்கள், உங்கள் தந்தையாரை எதிர்த்துப் பேசிய பேச்சு தர்க்க ரீதிக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், அரசியல் மரபுக்கு தினையளவுகூட ஒத்துவரமாட்டாததாகும்!... எதிரியின் கவுரவம் பாழ்படுமே என்பதற்காக, நம் நாட்டுக்கு வம்சவழிப் படி கட்டித் தீரக் கடமை கொண்ட கப்பத்தைக் கட்டவில்லையென்றால், அவனை – அப் பகைவனை முறியடிக்காமல் இருந்து விடலாமா? அம் முடிவுதான் சாத்தியப்படவல்லதா? உங்கள் கருத்தை அனுசரித்து ஒரு மன்னர் இருந்தால், மறுகணமே அவரது அரியாசனம் காற்றில் பறந்து விடாதா? சரித்திரத்தின் கதியைக் காப்பதுதான் அப்புறம் ஏனென்று ஆகிவிடமாட்டாதா?....நன்கு சிந்திக்க வேண்டும்!”

மேலும் தொடரலானார்:

“இளவரசி.... அடுத்த நடப்புக்கு இனி நான் வரவேண்டுமல்லவா?.... மாண்புமிகு மன்னவர்கள் குழந்தையின் வளர்ப்பை மேற்கொண்டுள்ள நாதசுரபியுடன் சற்று நெருக்கமாக இருந்து வருவதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு முன்னதாகவே நான் அரசரிடம் இதுபற்றி எச்சரித்தேன். குழந்தைமீது கொண்ட அளப்பரிய பாசமே இந்த நிலைக்கு உரிய தக்க காரணம் என்றும், இது அந்தப்புர நட்பு என்றும் சமாதானம் சொல்லிவிட்டார். அடுத்தது, நாதசுரபி என்ற கன்னிப் பெண் வேழநாட்டு உளவாளிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்பதும் உங்களது ஐயப்படாகும்!... அவளுக்கு அரசர் பெருமான் பிரத்தியேகமாகக் கொடுத்த முத்துமாலையும் முத்திரை மோதிரமும் உங்கள் கட்சிக்குக் காட்சியாகவும் சாட்சியாகவும் அமைகின்றன. ஆனால்...?” அமைச்சர் தலைவரால், மேற்கொண்டு தொடரக் கூடவில்லை. இருமினார். பிறகு பச்சைத் தண்ணீர் ஒரு மிடறு பருகிவிட்டுத் தொடர்ந்தார்: