பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

இளவரசி வாழ்க



“இவர்களையெல்லாம் யார் உள்ளே அனுமதித்தார்கள்?” என்று சீறினார் வேந்தர்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட காவலாளிகளின் குறையாக இருக்கும் என்று சமாதானம் சொன்னார், அமைச்சர்.

“புதிய ஆட்களை நீங்கள் இப்போது சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது! அவர்கள் ஒருக்கால்..!”சன்னக் குரலில் எச்சரித்தார், மன்னர்பிரான்.

வித்தையாடிக் கிழவன் இருமினான். அவன் ஒதுங்கி எங்கோ நின்றான்.

“வித்தைகள் சிலவற்றை ராஜ சந்நிதியில் காட்ட இந்த ஏழைக்கு அருள வேண்டும்!”

“வித்தை பார்க்க நேரமல்ல இது!...” என்று சொல்லி தங்க நாணயங்கள் சிலவற்றை எடுத்து வீசினார் அரசர்.

ஆனால் வந்த கிழவன் ஊன்றுகோலைப் பற்றியவாறு வழி நடந்தான். தங்க நாணயங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை!

″இவனைச் சோதித்துப் பார்க்கலாமே!” என்று சொன்னார் . அழகண்ணல் இருக்கையை விட்டு எழுந்தார்.

அந்நேரத்தில், “ஐயையோ!.. இளவரசைக் காண வில்லையே..” என்று பயங்கரமாக ஓலமிட்டபடி ஓடிவந்தாள் நாதசுரபி!...

“ஆ!” என்று அதிர்ந்தார், அரசர் பெருமான்!

8


சிருங்காரபுரி நாட்டின் கோள்கள் வக்கரித்துவிட்டன போலும்! இல்லையென்றால், அடிக்கொரு துன்பமாக அந்நாட்டை அல்லற்படுத்துமா?