பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எல்.ஆறுமுகம்

117



‘குழந்தையைக் காணவில்லை!’ என்று நாதசுரபி கூக்குரல் பரப்பிக் கதறியதைக் கேட்ட மாத்திரத்திலே, மாமன்னர் பூபேந்திர பூபதி மயங்கினார்; விழுந்தார், அடிசாய்ந்த ஆலமரமாக. “தெய்வமே!” என்று அவர் இதழ்கள் முணுமுணுத்தன.

கனகமணிக் கட்டிலிலே மன்னரைத் தாங்கிப் பட்டு மெத்தையில் படுக்க வைத்தார் அமைச்சர் திலகம். இளவரசியை அழைத்தார். அவள் வரவில்லை. அவளைத் தேடி அழைத்துவர, சேடி பறந்தாள். பிறகு, நாதசுரபியைக் கூப்பிட்டார். அவளையும் காணவில்லை.

அமைச்சர் பெருமகனுக்கு, ‘நாதசுரபியைக் காணவில்லை’ என்றதும், ஏனோ சந்தேகம் தட்டியது. இனியும் வாளாவிருப்பது தவறு என்று கருதி, குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான வழி வகைகளை செய்வதற்காக அவர் விரைந்து தன்னுடைய அலுவலகத்தை அடைந்தார். குழந்தையைத் தேடித்தான் இளவரசி போயிருக்க வேண்டும் என்ற திடம் அவருள் உதயமானது. வைரமும் நவரத்தினங்களுமாகத் திகழ்ந்த இளவரசரின் நிலையை எண்ணிய போது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. பெற்ற தந்தையின் நிலைக்குக் கேட்கவா வேண்டும்!

பூபேந்திர பூபதி கண் மலர்ந்தார். உடனே “கண்ணே! என் ராஜா!” என்று சிறு பாலகனாக மாறிக் கதறினார். கண்ணீர் பெருகிற்று. மீனாவதி ஆறு மடை உடைந்துவிட்டதோ, மகளை நினைந்து மனத்தை அலட்டினார். இளவரசியை எங்கு தேடியும் காணவில்லை என்றும், குழவியைத் தேடித்தான் அவள் போயிருக்க வேண்டும் என்றும் கருதி ஓரளவு அமைதியைச் சேகரம் செய்து கொள்ள முனைந்தார். பணிப்பெண்கள் கொணர்ந்த உணவில் ஒரு துளியைக் கூட தொடவில்லை அவர். நாதசுரபியையும் காணவில்லை என்றும் அறிந்தார்.அவருக்கு ஏனோ இதுவரை தோன்றாத சந்தேகம் இப்போது நாதசுரபி மீது