பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

11


3

“ஏய், தம்பி”

“....”

“ஏய், தம்பி”

பூபாலன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான். வலது காதின் ஒரத்தில் படர்ந்திருந்த செம்மை அவனுக்கு வேதனை தந்தது. தடவி விட்டுக் கொண்டான். பாவிப் பயல் காதைத் திருகாமல் எழுப்பினால், அவன் குடியா முழுகிப் போய்விடும்?

“ஏன் ஐயா, எங்க பள்ளிக்கூடத்துக் கணக்கு வாத்தியார்கிட்டே நீங்க காதைத் திருகுற வித்தையைக் கத்துக்கிட்டிங்களோ?...ம்!. என் மாதிரி உமக்கு ஒரு பயல் இருந்தா இப்புடிச் செய்வீங்களா?” என்று வேதாந்தம் பேசினான் பூபாலன். உடனே அவன், அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் எதிரில் நின்ற மனிதனை எடை போட்டுப் பார்த்தன.

மறுகணம் பூபாலன் வாயடைத்துப் போய் ‘யார் இந்த மனிதன்? நான் எங்கே இருக்கிறேன்? ஐயோ, என்னுடைய அருமை நாய்க்குட்டி எங்கே...?’ என்று மனத்திற்குள் வேதனைப்பட்டுக் கண்ணீர் வடித்தான்.

மறுபடியும் என்ன தோன்றிற்றோ, பூபாலன் எழுந்தான்; நடந்தான். காம்பவுண்ட் வாசலைத் தாண்டப் போனான். அப்போதும் அவனை யாரோ தடுத்து நிறுத்தியதை உணர்ந்தான். சற்று முன் எழுப்பிய அதே மனிதன்தான் எவ்வளவு ஆடம்பரமாக உடை உடுத்துக் கொண்டிருக்கிறான் இவன் ? எல்லாம் சில்க் மயம்!

“தம்பி, நீ யார்?”

“ஐயா, நீங்க யார்? அதை முதலிலே சொல்லுங்க”

“ஹி, ஹி! சுட்டிப்பயலாக இருக்கிறாயே? பேஷ் ! நான் யார் தெரியுமா? நான்தான் சுகுமார் சர்க்கஸ் கம்பெனி முதலாளி. என் பெயர் சுகுமார். சரி, இப்போது உன் பெயரைச் சொல்!”