பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ் ஆறுமுகம்

27


குட்டியுடன் குதிச்சேயில்லையா, அப்போது துப்பாக்கி வெடிச்ச ‘டுமீல்’ சத்தம் கேட்டுச்சு. நீ தாவிப் பாய்ஞ்ச கார் என்னுடையது.. மெய்தான், கொள்ளைக் கூட்டத் தலைவனுடையது. நான்தான் உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்றி, காரிலே வைத்துக் கொண்டு புறப்படப் போனேன். அப்பொழுது திரும்பவும் சர்க்கஸ் தலைவன் நம் எல்லோர் பேரிலும் குறி வைத்துச் சுட்டான். உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்ற வேணுமே என்ற பதட்டத்திலே, உன் நாய்க்குட்டியைப் பற்றிக் கவனிக்க முடியல்லே. அது எங்கே போச்சோ தெரியவும் இல்லை. தம்பி, கண் சிமிட்டுற நேரம் தாமதிச்சு இருந்தால் கூட, நாமெல்லாம் கூண்டோடு கைலாசம் போயிருக்க வேண்டியதுதான். கடவுள் புண்ணியத்திலே நல்ல வேளை தப்பிச்சிட்டோம். தம்பி, பயப்படாதே! உன்னையும் பூங்கோதையையும் என் குழந்தைகள் போலக் காப்பாற்றுகிறேன். என் சொல்லை நம்பு...” என்று கெஞ்சினான் கொள்ளைக்காரன்.

‘முடியாது! நீ என்னைக் கொல்; நான் கவலைப்படலே. ஆனா, என் தங்கச்சியை உன்னாலே ஒண்னும் செய்ய முடியாது; ஞாபகம் வச்சுக்க தங்கச்சி, வா புறப்படுவோம்!” என்று சொல்லிப் பூங்கோதையின் கையைப் பிடித்துக் கொண்டான்; எதிரே குறுக்கிட்டு நின்ற அந்தக் கொள்ளைக்காரனை விலக்கி விட்டு நடந்தான் பூபாலன்.

“தம்பி! தங்கச்சி!”

கொள்ளைக் கூட்டத் தலைவன் அவர்கள் இருவரையும் வழி மறித்தான்.

“சீ! போ!” என்று ஆத்திரம் பொங்கக் கூறினான் பூபாலன். அதே சடுதியில், அருகில் கிடந்த ஒரு கழியை எடுத்து அவன் மீது வீசினான் பூபாலன். கள்வனின் மண்டையில் ரத்தம் பீறிட்டது.

“அப்பா!” என்ற குரல் வானை முட்டியது.

மறுகணம், பூங்கோதை அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் அருகே சென்று விம்மினாள்.