பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

33



“பூங்கோதை!” என்று அழைத்தான் பூபாலன். பிறகு உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெண்கள் நாலைந்து பேர் சிறுமி பூங்கோதையைச் சற்றி நின்றுகொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆகா! எவ்வளவு அற்புதமான காட்சியுடன், இனிமையான பாடல்.

‘குங்குமத்தின் பொட்டுதனை நெற்றியிலிட்டு
     குலச் சுடராம் கோதைக்கு வாழி பாடுவோம்.
எங்கள் குலக்கொடியில் பூத்த பூங்கோதை;
     எல்லோரும் அன்பு செயும் நல்ல பூங்கோதை;
மங்களம் பிறந்த தினம் போற்றி மகிழ்வோம்,
     மலரிதழைத் தூவி இறை பதம் பணிவோம்;
தங்கத்தைப் பொடிசெய்து கோல மிடுவோம்;
     தந்தத்தை வந்தவர்க்குச் சீர் வழங்குவோம்!’

“பூபாலா, புறப்படு, இன்றைக்கு ஷூட்டிங் இருக்கு. பூவைமாநகர் மாரியம்மன் தேர் திருநாளையும் படம் பிடிக்க வேணும். நீயும் கோதையும் அற்புதமாக நடிச்சிடணும்?” என்றார் கோதையின் தந்தை – டைரக்டர் பரசுராம். “ஓ” – ஒரு குரல் மட்டுமல்ல; இரட்டைக் குரல்!

கோயிலின் எதிர்ப்புறத்தில் இருந்த பங்களாவில் படப்பிடிப்புக்குரிய வேலைகள் நடைபெற்றன.

தேர் ஊர்வம் படமாக்கப்பட்டது.

பிறந்த நாள் வைபவ வாழ்த்துப் பாட்டைச் சற்றுமுன் பூபாலன் கேட்டு மெய் மறக்கவில்லையா? அதே பாட்டைத் திரும்பவும் பாடினார்கள்.

பூங்கோதை சிரித்த வண்ணம் நின்றாள். அப்பொழுது பூபாலன் மகிழ்ச்சி பொங்க, ஓர் அழகிய வைரச்சங்கிலியை யாரும் எதிர்பாராத சமயத்தில் பூங்கோதையிடம் நீட்டினான்.